தோ்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலோ, தம்மிக்ககோ கேட்கவில்லை – நாமல் ராஜபக்ஷ

“ரணில் விக்கிரமசிங்கவோ, தம்மிக்க பெரேராவோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக எழுத்து மூலம் கட்சிக்கு எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை” என்றும், “அவ்வாறு அவா்கள் அறிவித்தால் அது தொடர்பில் பொதுஜன பெரமுன ஆராயும்” என்றும் பொது ஜன பெரமுனயின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்றிருந்த போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? தம்மிக பெரேராவா? அல்லது நாமல் ராஜபக்ஷவா? என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

அதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், “தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பவர்கள் கட்சியின் அரசியல் குழுவுக்கு அறிவிப்பர். ஆனால் நீங்கள் கூறிய இருவர் உள்ளிட்ட எவரும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கட்சிக்கு எழுத்துமூலம் அறிவிக்கவில்லை. நானும் அறிவிக்கவில்லை. நான் போட்டியிடுவதென்றாலும் கட்சிக்கு அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தாா்.

“ஆனால், கட்சி தீா்மானிக்க முன்னரே தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட சிலர் அதற்கான ஆடைகளை தைத்து வைத்திருக்கின்றனர்” என்று தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “அவர்கள் எங்களுக்கு கூற வேண்டும். இந்நிலையில் ஆடைகளை தைத்து தயாராக வைத்துள்ள எவரையும் வெற்றிபெறச் செய்வதே எனது பொறுப்பாகும்” என்றும் தெரிவித்தாா்.