ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க பொது ஜன பெரமுன ஆதரிக்காது – கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அவருக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை, சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறான பிரேரணை நாடாளுமன்றத் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது எனவும் கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டத்தல் பதவி விலகியிருந்தார்.இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் எனவும் பதவி நீடிப்பு தொடர்பான யோசனைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை அறிவிப்பதிலும் தொடர்ச்சியாக இழுபறி நிலை நீடிக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக மாற்றியமைக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.

அதனை தற்போது மீண்டும் ஆறு வருடங்களாக அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பாக அரசாங்கத்துக்குள் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக செயற்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவித்துள்ளமை அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

எனினும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டும் இறுதியில் கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில் அதனை கைவிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதிப் பதவிக் காலத்தை அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு குறித்த யோசனையை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்துக்குள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ளது.