ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த முரண்பாடு – திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் (ஆ) பிரிவைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பில் முரண்பாடு நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டது.

அதன்படி, ‘ஆறு வருடத்திற்கு மேல்’ என்பதற்குப் பதிலாக ‘ஐந்து வருடங்களுக்கு மேல்’ என அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரிமையின் (ஆ) பிரிவைத் திருத்தம் செய்யக் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்பிறகு, சட்டவரைஞரால் குறித்த திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலவரைவுக்கு சட்டமா அதிபரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்சமயம் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.