ஜனாதிபதி தனது பதவி காலத்தை 5 ஆண்டைவிட அதிகரிக்க முடியாது – பவ்ரல் அமைப்பு அறிவிப்பு

அரசமைப்பின் 19ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது. இதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அந்த அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், அரசமைப்பின் பிரகாரம் மக்கள் ஆணை இன்றி, நாட்டின் ஜனாதிபதிக்கு 5 வருடங்களுக்கு அப்பால் சென்று ஜனாதிபதி பதவியை வகிக்க சட்ட ரீதியான அனுமதி இல்லை.

அரசமைப்பின் 83ஆவது உறுப்புரிமைக்கு அமைய, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 வருடங்களுக்கு அதிக காலத்துக்கு அதிகரித்துக் கொள்வதென்றால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்களிப்புக்கு செல்லவேண்டும். ஆனால், அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தின்போது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம்தான், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு தவணைக்கு மட்டுப்படுத்துவது மற்றும் ஒரு தவணையை 6 வருடத்திலிருந்து 5 வருடமாகக் குறைப்பதாகும்.

இதன் பிரகாரம் 19ஆம் திருத்தத்துக்குப் பின்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 5 வருடங்களில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் எந்த வகையிலும் 5 வருடங்களுக்கு அதிக காலத்துக்கு ஜனாதிபதி பதவியை கொண்டு செல்ல முடியாது. அத்துடன் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி வெற்றிடமான சந்தர்ப்பத்தில், பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுபவர் – முன்னர் (வெற்றிடமான) ஜனாதிபதியாக பதவி வகித்த நபரின் பதவிக்காலம் முடிவடையும் வரைக்குமே பதில் ஜனாதிபதி பதவி வகிக்க முடியும். இதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த எஞ்சிய காலப்பகுதி வரைக்குமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.