ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம்  கைச்சாத்திடபட்டது.

குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில்  ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை   கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே  இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டனர்.