ஜனாதிபதி தேர்தலில் போட்டி! தமிழ்க் கட்சிகளுடன் விரைவில் பேச்சு – விஜயதாஸ

சிறீ லங்கா சுதந்திரக்கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் ஏற்கனவே உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் தரப்புகளுடன் விரைவில் பேச்சுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.

சிறீ லங்கா சுதந்திரகட்சியின் தவிசாளராக செயல்படுவதற்கு நீதிமன்றம் தடைகளை விதித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். சிறீ லங்கா சுதந்திரகட்சியின் பெயர்ப் பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால், சிறீ லங்கா சுதந்திர கட்சி என்ற பேருந்து எனது கையில்தான் உள்ளது. ஆகவே அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது.

இதேநேரம், வடக்கு, கிழக்கு மக்களுடன் உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் விரைவில் அம்மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் உரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன்” என்றார்.