ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்று நாடாளுமன்ற விவாதம்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் நடத்துவதன் அவசியம் தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கூட்டாக முன்வைத்த பிரேரணைக்கு அமைய இந்த ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்களை தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.30 வரை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பு மற்றும் ஏனைய தொடர்புடைய சட்டங்களின் ஏற்பாடுகளுக்கமைய 2024 செப்ரெம்பர் 17 முதல் ஒக்ரோபர் 16 வரையான காலப்பகுதியினுள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஒருவருடத்தினால் நீடிப்பதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியிருந்தார்.