தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: கேலி செய்த Elon Musk ?

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று   கூறியிருக்கிறார்.

மைக்ரோசாப்ட் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால்  இந்த பிரச்சினையால் உலகமே முடங்கியபோதிலும், ரஷ்யா, சீனாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.

‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஐடி செயலிழப்பு, ஈலோன் மஸ்க்

இந்த நிலையில், இந்தத் தகவல் தொழில்நுட்பச் செயலிழப்பு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று கூறியிருக்கிறார்.

மேலும், அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைக் கேலி செய்து சில மீம்களையும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கட்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.