தனது பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு

சீனா வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தில் இந்தியாவின் இரண்டு பிரதேசங்கள் சீனாவுடன் இணைக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பிளற்றோ ஆகிய பிரதேசங்களை சீனா தனது நாட்டின் புதிய வரைபடத்தில் இணைத்துள்ளது.

இரஜதந்திர வழிகளின் ஊடாக நாம் சீனாவுக்கு எமது கடுமையன எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். சீனாவின் புதிய வரைபடத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.

சீனாவின் திட்டத்தை நிராகரித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வரைபடத்தில் இணைத்துள்ளதால் இந்தியாவின் பிரதேசங்கள் சீனாவின் பகுதிகள் ஆகிவிடாது எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஹிமாலையா மலைப்பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் தென்பகுதியுடன் இணைத்துள்ள சீனா, மேற்கு ஹிமாலையா மலைப்பகுதியில் உள்ள அக்சாய் சின் பகுதியையும் தன்னுடன் இணைத்துள்ளது. இந்த எல்லைப்பகுதி தொடர்பில் இரு நாடுகளும் 1962 ஆம் ஆண்டு போரில் ஈடுபட்டிருந்தன.

2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இந்த மோதலில் 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.