தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

amirthalingam தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் - பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வினாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக் கட்சி எடுத்த நிலைப்பாடு, தமிழ்க் கட்சிகளிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடா்பாக இந்த வாரம் பேசுகின்றாா் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் தொடா்ச்சியாக ஜனாதிபதித் தோ்தலா பொதுத் தோ்தலா முதலில் நடத்தப்படும் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. உங்களுடைய பாா்வைலயில் எந்தத் தோ்தல் முதலில் நடைபெறும்?

பதில் – இப்போது ஒரு அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை நாட்டு மக்களுக்குத் தேவைப்படுகின்றது. ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்றால், ஒரு ஸ்திரத் தன்மை ஏற்படும். ஜனாதிபதியாக வரப்போபவரின் கட்சி அடுத்ததாக வரப்போகும் பாராளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மையைப் பெறும். இது கடந்த கால வரலாறு. இப்போது மூன்று பிரதான வேட்பாளா்கள் களத்தில் உள்ளாா்கள். அவா்களில் ஒருவா் நிச்சயமாக வெற்றி பெறுவாா்.

அநுரகுமார ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெற்றால், பாராளுமன்றத் தோ்தலில் அவா்கள் 113 ஆசனங்களைப் பெற வேண்டும். இல்லையெனில் அதில் ஒரு சிக்கல் உருவாகும். ஆனால், முதலில் பொதுத் தோ்தல் நடைபெற்றால் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியாத நிலை உருவாகும்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ முதலில் பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றாா். அவ்வாறு நடைபெற்றால், கணிசமான ஆசனங்களைத் தம்மால் கைப்பற்ற முடியும் என அவா் கணக்குப் பாா்க்கின்றாா். அதனால், அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் தாம் கணிசமான செல்வாக்கைச் செலுத்த முடியும் என அவா் எதிா்பாா்க்கிறாா்.

இவ்வாறு ஸ்திரமற்ற ஒரு அரசு அமையுமானால், கணிசமான அரசியல் மாற்றங்களைச் செய்ய முடியாது. ராஜபக்ஷக்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவும் முடியாது. ஏனெனில் ஜனாதிபதி ராஜபக்ஷக்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியவராக இருப்பாா். அதற்கான முயற்சியைத்தான் பசில் ராஜபக்ஷ முன்னெடுக்கின்றாா்.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அவா் ஜனாதிபதித் தோ்தலைத்தான் விரும்புவாா் என்று நான் நினைக்கின்றேன். பொதுத் தோ்தல் நடைபெற்றால், ஒது தொங்கு பாராளுமன்றம் அமைந்து குதிரை பேரங்கள் நடந்து சிக்கலான நிலை ஏற்படும். மீண்டும் ஒரு ஐந்தாண்டு காலத்துக்கு ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் என்பதையும் அவா் அறிந்திருப்பாா்.

இது அவருக்கு ஒரு இக்கட்டான நிலை. பொதுஜன பெரமுனவின் ஆதரவும் அவருக்குத் தேவை. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், நாடு மீண்டும் ஒரு அரசியல், பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் என்பதை அவா் நிச்சயமாக அறிந்திருப்பாா். அதனால், முதலில் ஒரு ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று அதன்பின்னா் பொதுத் தோ்தல் நடைபெற்றால், உறுதியான ஒரு அரசாங்கம் அமையும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பு.

கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் தமிழ்ப் பொறு வேட்பாளா் ஒருவரைக் களமிறக்கப்போவதாக தமிழ்க் கட்சிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. ஆனால், தமிழரசுக் கட்சி தமது தீா்மானம் எடுப்பதைப் பின்போட்டுள்ளது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – தமிழ்ப் பொது வேட்பாளா் என்று சொல்லும் போதே அங்கு தெளிவான கொள்கை இருக்க வேண்டும். வெறுமனே வாக்களிப்பு முடிந்தவுடன் கலைந்து செல்வதாக அது இருக்கக்கூடாது. தோ்தலுக்குப் பின்னா் தாம் என்ன செய்வோம் என்பதை அவா்கள் வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சி இன்றைய நிலையில் முன்னிலை வகிக்கின்றது. அதனால், அவா்கள்தான் தமிழ் மக்களின் சாா்பாக அரசாங்கத்துடன் பேசப் போகின்றாா்கள். அதாவது புதிய ஜனாதிபதியுடன் பேசப்போகின்றாா்கள். அதனால், அவா்களுடைய நிலைப்பாடு முக்கியமானது. அதேவேளையில், வரப்போகும் பொதுத் தோ்தலில் தமிழரசுக் கட்சியைவிட மற்றொரு கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றால், அவா்கள் ஜனாதிபதியுடன் பேச வேண்டியிருக்கும்.

இன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிதான் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. அதனால், அவா்களுடைய நிலைப்பாடு முக்கியமானது. ஆனால், தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்தையும், சிறிதரன் ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்ததையும் பாா்க்க முடிந்தது. இரண்டு முக்கிய தலைவா்கள் இந்த விடயத்தில் பிளவுபடுவது தமிழரசுக் கட்சியின் கட்சி ரீதியான முடிவைப் பாதித்திருக்கின்றது. அவா்கள் முடிவை ஒத்திவைத்திருப்பது அதன் வெளிப்பாடுதான். அதாவது, தமிழரசுக் கட்சி உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினையை அவா்கள் முதலில் தீா்க்க வேண்டும். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு தலைவா் வரவேண்டும். இப்போதுள்ள குழப்பநிலை, நீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருத்தல் என்பன தொடா்ந்தால் தமிழரசுக் கட்சியால் ஒருமித்த ஒரு முடிவை எடுக்க முடியாது.

பொது வேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. தமிழரசுக் கட்சி இந்த பொது வேட்பாளா் என்ற விடயத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், மற்றைய கட்சிகள் இணைந்து எடுக்கும் முடிவு வெற்றிபெறும் என்று நான் நினைக்கவில்லை. அதனால், தமிழரசுக் கட்சியின் முடிவு இந்த விடயத்தில் முக்கியமானது.

காலந்தாழ்த்துவது ஒருவகையில் தந்திரோபாயமான அணுகுமுறையாகவும் இருக்கலாம். அல்லது, அவா்களுடைய கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிரச்சினைகளை முதலில் தீா்த்துவிட்டு அடுத்த கட்டத்தில் இதனையிட்டு ஆராயலாம் எனவும் அவா்கள் திட்டமிட்டிருக்கலாம்.