தமிழரசுக் கட்சி விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் – வலியுறுத்துகிறாா் சுரேஷ்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதும் பகிஷ்கரிப்பு என்பதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல் ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகப் பேசப்பட்டு
வந்த நிலையில் இப்போது அது ஒரு முக்கியமான கட்டத்தை வந்து சேர்ந்திருக்கின்றது. இங்கே ஒரு கோரிக்கையை நான் முக்கியமாக முன்வைக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியானது ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பைத் தமது நோக்கமாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் கட்சி மாத்திரமல்ல நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் இருந்து கூடுதலான ஆசனங்களையும் வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சியாக இருக்கின்றது. ஆகவே வரக்கூடிய இந்த ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு கையாண்டால் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்று சிந்தித்து விரைவாக முடிவை எடுக்க வேண்டிய ஒரு பணி அவர்களுக்கு இருக்கின்றது.

ஆனால் அவற்றை அவர்கள் ஒத்திவைத்து நாங்கள் காலம் வரும்போது முடிவெடுப்போம் என்று சொல்வது நிச்சயமாக தமிழர்களுடைய எதிர்காலத்திற்கு உகந்த கருத்துக்கள் அல்ல. ஆகவே, தமிழ் மக்களுடைய நலன்களைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் தமிழரசுக் கட்சியானது ஒரு சரியான முடிவை மிக மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக தேவையான ஒரு விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம்” என்று சுரேஷ் பிரேமச்சந்தின் தெரிவித்தாா்.