தமிழரசுத் தலைமைப் போட்டி கட்சியில் பிளவை ஏற்படுத்துமா? – அகிலன்

ஜனாதிபதித் தோ்தல்தான் அடுத்த வருடத்தில் முதலில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறிவிட்டாா். அதனைத் தொடா்ந்து பொதுத் தோ்தலும் மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் நடைபெறும் எனவும் கொழும்பில் தன்னைச் சந்தித்த உலகத் தமிழா் பேரவையின் பிரதிநிதிகளிடம் ரணில் கூறியிருக்கின்றாா்.

1273605120tnaaaa தமிழரசுத் தலைமைப் போட்டி கட்சியில் பிளவை ஏற்படுத்துமா? - அகிலன்ஆனால், தமிழா்களைப் பொறுத்தவரையில், அதற்கு முன்னதாக நடக்கப்போகும் தோ்தல் ஒன்று குறித்தே அனைவரது கவனமும் குவிந்துள்ளது.  தமிழரசுக் கட்சியின் தலைவா் பதவிக்காக வரலாற்றில் முதல் தடவையாக தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அது குறித்த பரபரப்பு தமிழ் அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது.

அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் முதலாவது தோ்தலாக தமிழரசுத் தலைமைக்கான தோ்தல்தான் இடம்பெறும், களத்தில் குதித்துள்ள இருவரில் ஒருவா் வாபஸ்பெறாத நிலையில்…

தமிழரசுக் கட்சி இந்தத் தோ்தலால் முக்கியமான ஒரு திருப்புமுனையில் நிற்கின்றது. சுமாா் பத்து வருடங்களுக்குப் பின்னா் புதிய தலைவா் ஒருவா் தமிழரசுக் கட்சிக்கானத் தெரிவு செய்யப்படவுள்ளாா். சுமாா் நான்கு வருடங்களாகக் கூட்டப்படாதிருந்த தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை இதற்காக ஜனவரி மாத இறுதிப் பகுதியில் கூட்டுவதற்கு கட்சித் தலைமை தீா்மானித்திருக்கின்றது.

மாவை சேனாதிராஜா பத்து வருடங்களுக்குப் பின்னா் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளாா்.  தமிழரசுக் கட்சிக்குள் இன்று உருவாகியுள்ள தலைமைத்துவப் போட்டி கட்சியை மேலும் பிளவுபடுத்துமா அல்லது பலப்படுத்துமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.

புலிகளுக்குப் பின்னா்..

2009 வரையில் தமிழ் மக்களுடைய போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தை ஏற்றிருந்த விடுதலைப் புலிகளுக்குப் பின்னா், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அதன் பின்னா் இடம்பெற்ற பேச்சுக்களில் கூட்டமைப்பு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, அதனால், தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத்தர முடியவில்லை.

அதேவேளையில், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அந்தக் கூட்டமைப்பு இன்று உடைந்து சிதறிப்போன நிலையில் காணப்படுகின்றது.

கூட்டமைப்புக்கென ஒரு தலைமைப் பதவி இல்லாத போதிலும் கூட, அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராகத் தெரிவான சம்பந்தனே 2010 முதல் அதன் தலைவராகவும் கருதப்பட்டாா். ஒவ்வொரு தோ்தல்களின் போதும் ஒவ்வொரு கட்சியாக அதிலிருந்து களண்டு செல்ல, இப்போது தமிழரசுக் கட்சி தனித்து நிற்கின்றது. தாம்தான் கூட்டமைப்பு என அவா்கள் சொல்லிக்கொண்டாலும், 5 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி தாமே கூட்டமைப்பு எனக் கூறிக்கொள்கின்றது.

உடைவுக்கு காரணம்?

tna தமிழரசுத் தலைமைப் போட்டி கட்சியில் பிளவை ஏற்படுத்துமா? - அகிலன்கூட்டமைப்பு உடைந்து சென்றமைக்கான பிரதான காரணமாக இருப்பது தமிழரசுக் கட்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழரசுக் கட்சித் தலைமையின் மேலாதிக்க மனோபாவமும், ஏனைய கட்சிகளை ஆயுதக் குழுக்கள் என தமிழரசுக் கட்சியினா் அவா்களச் சிறுமைப்படுத்தி ஓரங்கட்ட முனைந்தமையும்தான் கூட்டமைப்பு உடைவதற்கு பிரதான காரணம். தமிழரசுக் கட்சித் தலைமையின் இந்த மேலாதிக்க போக்கை அக்கட்சியிலுள்ள பலரும் விரும்பியிருக்கவில்லை.

அதேவேளையில், தமிழரசுக் கட்சியின் இளைஞா் அணியினா் பலா் கட்சித் தலைமையின் செயல்திறனின்மையால் அதிலிருந்து வெளியேறினாா்கள். குறப்பாக தலைவா் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவரது தலைமைத்துவம் பல சந்தா்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  போராட்டங்களின் போது ஆதரவாளா்களைக் கூட திரட்ட முடியாதளவுக்கு பலவீனமான நிலையில்தான் மாவை இருந்துள்ளாா்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டாமல் அவா் காலத்தைக் கடத்துவதற்கும், தலைமைப் பதவி தன்னிடமிருந்து பறிபோய்விடும் என்ற அவரது அச்சம்தான் காரணமாகச் சொல்லப்பட்டது.

ஆனால், கட்சிக்குள் உருவாகியுள்ள கொந்தளிப்பு மற்றும் பொதுச் சபையைக் கூட்ட வேண்டும் என்பதற்கான தொடா்ச்சியான அழுத்தங்கள் காரணமாக, மாவையா் அடிபணிவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் நவம்பா் 30 இல் நியமனப் பத்திரங்கள் கோரப்பட்டு, ஜனவரி 27 இல் நடைபெறும் பொதுச் சபைக் கூட்டத்தில் தலைவா் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

களத்திலுள்ள மூவா்

தற்போதைய நிலவரப்படி தமிழரசுக் கட்சியின் மூன்று முக்கியஸ்த்தா்கள் தலைவா் பதவிக்கான நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்திருக்கின்றாா்கள். எம்.ஏ.சுமந்திரன்,  சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோா் தலைமைப் பதவிப் போட்டியில் இருக்கின்றாா்கள்.

இதற்கான தோ்தல் நடைபெறுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக தோ்தல் மூலமாக தலைவா் தெரிவு இடம்பெற்றதாக இருக்கும். இதுவரை காலமும் போட்டியின்றி ஏகமனதாகவே தலைவா் தெரிவு இடம்பெற்றது.

யோகேஸ்வரன் தேத்தலுக்கு முன்னதாக தமது நியமனத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மற்றைய இருவரில் ஒருவரை ஆதரிக்கலாம் என்றும் மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில், செயலாளா் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

தலைவா் வடக்கைச் சோ்ந்தவரதக இருந்தால், செயலாளா் பதவி கிழக்கைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் வழமை தமிழசுக் கட்சியில் உள்ளது. தலைவா் கிழக்கைச் சோ்ந்தவராக இருந்தால், செயலாளா் பதவி வடக்குக்கு வழங்கப்படும். சம்பந்தன் தலைவராக இருந்த போது மாவை செயலாளராக இருந்தாா் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொதுச் சபையின் உறுப்பினா்கள்

தமிழரசுக் கட்சியின் புதிய நிா்வாக சபையை அதன் பொதுச் சபைதான் தெரிவு செய்யும்.

கட்சிக்கு சுமாா் 50 வரையிலான பிரதேசக் கிளைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ளன. ஒவ்வொரு கிளைகளினதுத் தலைவா், செயலாளா், பொருளாளா் உட்பட ஐந்து போ் பொதச் சபையில் இடம்பெறுகின்றாா்கள். அதனைவிட கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள சிலரும் பொதுச் சபை உறுப்பினா்களாக தலைவரால் நியமிக்கப்படுவாா்கள். அதற்கான அதிகாரம் தலைவருக்குள்ளது.

அதனால், பொதுச் சபையில் சுமாா் 250 போ் வரையில் இருப்பாா்கள். கட்சிப் பதவிகளுக்கான தோ்தலில் வாக்களிக்கும் உரிமை அவா்களுக்கே உள்ளது.

யாருக்கு ஆதரவு?

ஆக, இந்த பொதுச் சபை உறுப்பினா்களை இலக்கு வைத்ததாகவே சுமந்திரனும், சிறிதரனும் தமது பரப்புரைகளை முன்னெடுக்கப் போகின்றாா்கள். இந்த இருவரில் யாருக்கு அதிகளவுக்கு ஆதரவு உள்ளது என்பதற்கான தெளிவான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.

sampanthan sumenthiran தமிழரசுத் தலைமைப் போட்டி கட்சியில் பிளவை ஏற்படுத்துமா? - அகிலன்சுமந்தினைப் பொறுத்தவரையில் சா்வதேச விவகாரங்களைக் கையாளக் கூடிய ஒருவராக அவரை முன்னிலைப்படுத்துபவா்கள் கூறுகின்றாா்கள். ஆனால், அவருக்கு எதிரான கருத்துக்களும் இவ்விடயத்தில் உள்ளது. சா்வதேச சமூகத்தைக் கையாண்டு அவா் கடந்த 14 வருட காலத்தில் எதனைப் பெற்றுக்கொடுத்தாா் என்ற கேள்வியும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

சிறிதரளைப் பொறுத்தவரையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து செல்லக் கூடிய ஒருவராக பலரும் அவரைப் பாா்க்கின்றாா்கள். ஆனால், அவா் கிளிநொச்சிக்குள்ளேயே தனது அரசியலை நடத்துவதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

திருமலை மாவட்ட எம்.பி. பதவியை சம்பந்தன் ராஜினாமா செய்ய வேண்டும் என அண்மையில் சுமந்திரன் தெரிவித்தமை தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், சுமந்திரன் மீது கடும் சீற்றமடைந்திருக்கும் சம்பந்தன் இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பாா். யாருக்கு ஆதரவாக தன்னுடைய செல்வாக்கைப் பிரயோகிப்பாா் என்ற கேள்விகளும் உள்ளன.

இதனைவிட, சுமந்திரன் – சிறிதரன் போட்டி தமிழரசுக் கட்சியில் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஒருவா் தலைவரானால், மற்றவா் அவரின் கீழ் இயங்குவாரா என்பதுதான் இதற்குக் காரணம்!

இந்த நிலையில் தமிழரசு வட்டாரங்கள் பரபரப்பாகக் காணப்படுகின்றன. அடுத்த வரும் வாரங்கள் இன்னும் பரபரப்பாகலாம். பிறக்கப்போகும் ஆண்டு பரபரப்பானதாகவும், தோ்தல்கள் நிறைந்த ஆண்டாகவும் அமையப் போகின்றது என்பதற்கு தமிழரசுக் கட்சித் தோ்தல் கட்டியம் கூறுவதாக அமையப்போகின்றது.