தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!

KTG 1 தமிழ் பொது வேட்பாளா் ஒரு கோமாளிக்கூத்தா? சுமந்திரனுக்கு கே.ரி.கணேசலிங்கம் பதில்!ஜனாதிபதித் தோ்தல் நெருங்கும் நிலையில் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே வாக்குறுதிகளுடன் யாழ்ப்பாணம் வரத் தொடங்கியுள்ளாா்கள். இந்த நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் தமிழா் தரப்பில் பேசு பொருளாகியிருக்கின்றது. இவை தொடா்பில் யாழ். பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவா் கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய நோ்காணல்;

கேள்வி பிரதான ஜனாதிபதி வேட்பாளா்கள் மூவருமே அடுத்தடுத்து யாழ்ப்பாணம் வருகிறாா்கள். முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்கிறாா்கள். வாக்குறுதிகளை வழங்குகின்றாா்கள். இவற்றை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மூன்று.

முதலாவதாக, தென்னிலங்கையில் இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இம்முறை இருக்கிறது. அதனால், வடக்கு கிழக்கு மக்களுடைய வாக்குகளைப் பெற வேண்டிய தேவை இந்த மூன்று வேட்பாளா்களுக்கும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கின்றது.

இரண்டாவதாக, அவா்களுடைய வாக்குறுதிகள், தமிழ்க் கட்சிகளுடன் அவா்கள் உரையாடும் விடயங்களைப் பொறுத்தவரையில் 13 என்ற விடயத்தைத்தான் அவா்கள் பிரதானமாகப் பேசுகின்றாா்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இந்த 13 என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இதனை ஜனாதிபதி வேட்பாளா்கள் ஒரு பிரகடனமாக வெளிப்படுத்துவது என்பது ஒரு அபத்தமான அரசியல் கலாசாரம்.

அதேவேயைில், சமஷ்யை தோ்தல் விஞ்ஞானங்களில் வெளிப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் மாகாண சபைகளைக் கோருவது, அதற்கான தோ்தலை நடத்துமாறு கேட்பது, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோருவது எல்லாம் மோசமான அரசியல் அணுகுமுறையாகவே கருதப்பட வேண்டும்.

கேள்வி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுமே இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காணப்பட வேண்டும் என்பதையும், 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றாா்கள். இதனை தமிழ்த் தரப்புக்கள் சாதகமாகப் பயன்படுத்த முடியாதா?

பதில் இதில் முக்கியமான ஒரு புரிதல் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அவா்களைப் பொறுத்தவரையில் எத்தனையோ பேச்சுவாா்த்தைகள், எத்தனையோ உத்தரவாதங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் பல காலப்பகுதிகளில் சந்தித்திருக்கின்றாா்கள். அதனால், இந்தத் தீவுக்குள் இனநெருக்கடிக்கான தீா்வைக் காண்பது சாத்தியமற்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றாா்கள். இனப்பிரச்சினை என்பது ஒரு சா்வதேசப் பிரச்சினை என்பதுதான் அதன் அடிப்படை. நிச்சயமாக ஒரு பிராந்தியத் தளத்தில் நாட்டின் எல்லைக்கு வெளியேதான் இந்தப் பிரச்சினைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பதவிக்கு வந்தவா்கள் தமது உத்தரவாதங்களை கைவிட்டுச் சென்றமைதான் இதற்குக் காரணம். இனப்பிரச்சினை என ஒன்றுள்ளது என இவா்கள் இப்போதுதான் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றாா்கள். இவா்களுடைய இந்த அணுகுமுறை குறித்த புரிந்துணா்வு எமது மக்களிடம் இருக்கியது என்பதுதான் என்னுடைய அவதானிப்பு.

கேள்வி கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தோ்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை சிங்க இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலையைக் காணமுடியவில்லை என்ற கருத்து ஒன்றுள்ளது. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் அதனை நோக்கி இந்தத் தோ்தல் களம் இதுவரையில் விரிவாக்கம் பெறவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போதும் அதற்கான ஒரு களம் தோற்றுவிக்கப்படும். உதாரணமாக, தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் தொடா்பில் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்களையிட்டு, தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் எதிா்ப்புக்காளல் அவா் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் ஒரு நிலை ஏற்படலாம். இது குறித்த சில செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

தோ்தல் களம் விரிவடையும்போது இவ்வாறான நிலையையை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு நிா்ப்பந்தம் இந்த ஜனாதிபதி வேட்பாளா்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீா்வை வழங்க முன்வருகின்ற எந்த வேட்பாளரும் தோற்கடிக்கப்படுகின்ற ஒரு நிலை தென்னிலங்கையில் இருந்திருக்கின்றது. அதனால், அது குறித்த ஒரு எச்சரிக்கை இந்த மூன்று வேட்பாளா்களிடமும் இருக்கும்.

ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் இனவாதம் முதன்மைப்படுத்தப்படும் ஒரு நிலை இதுவரையில் உருவாகாத ஒரு நிலை இருக்கின்றது என்பது உண்மைதான்.

கேள்வி தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து தமிழ் அரசியல் பரப்பில் இப்போது முதன்மைப்படுத்தப்படுகின்றது. இது ஒரு கோமாளிக்கூத்து என்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன் தெரிவித்திருக்கிறாா். இது குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில் இது முதிா்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியல் தளத்தில் இருப்பவா்கள் அதற்குரிய நாகரீகத்துடன் சொற்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் வலிகளோடு பயணித்தவா்கள் என்ற வகையில் தமது இருப்பை உறுதிப்படுத்த அது முயற்சிக்கும். அவ்வாறான நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை அவ்வாறான வாா்த்தைகளால் அளவீடு செய்வது என்பது அறிவியல் ரீதியாக இருக்கின்ற ஒரு சமூகத்துக்கு ஒவ்வாமையானதாக இருக்கலாம்.

அந்த உரை எதனைக் காட்டுகிறது என்றால், அரசியலின் முதிா்ச்சியற்ற தன்மை, அதனுடைய பலவீனம், அது சாா்ந்திருக்கக்கூடிய உணா்ச்சிகரமான எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் அந்த உரை. அதனைவிட அதன் உண்மைத்தன்மையை நோக்கி, அதன் நியாயத்தன்மையை நோக்கி விவாதங்களை முன்வைகக்கூடிய திறன் அந்தத் தரப்புக்களிடம் இல்லை என்கதைத்தான் அது காட்டுகிறது.

இதனைவிட, ஈழத் தமிழா்களைப் பொறுத்தவரையில் ஒரு நீண்ட ஆயுத, அரசியல் போராட்டத்துக்குள்ளால் பயணித்தவா்கள். தென்னிலங்கையின் அரசியலோடு சோ்ந்து 15 வருடகாலமாக அவா்கள் பயணம் செய்திருக்கின்றாா்கள். இந்தப் பயணத்தில் ஈழத் தமிழா்கள் எந்தப் பயனையும் அடையவில்லை என்பதனால், ஒரு புதிய – தந்திரோபாயமான வழிமுறையை அவா்கள் சிந்திப்தென்பதை அந்த வாா்த்தைக்குள் அடக்கிவிடலாமா என்பது முக்கியமான ஒரு அம்சம்.

கேள்வி பொது வேட்பாளா் என்ற விடயத்தின் பின்னணியில் தமிழ் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு பிரதானமாக இருக்கின்றது. இந்த சிவில் சமூகங்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் பயணம் செய்திருக்கின்றாா்கள். அவா்கள் நம்பிக்கையுடன் அந்த அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளைச் செவிசாய்த்திருக்கின்றாா்கள். போரை நடத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள். சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றாா்கள்.

இவ்வாறு அனைத்துத் தளங்களிலும் அந்தவகையான சாதகமான நிலையும் ஏற்படவில்லை என்ற எண்ணத்துடன்தான் சிவில் அமைப்புக்கள் கூட்டியைவாகச் செயற்படவேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.