தயா ரத்நாயக்கவை கட்சியிலிருந்து நீக்குங்கள் – சஜித்தை எச்சரிக்கிறாா் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை கட்சியில் இருந்து நீக்குமாறும், இல்லாவிடின் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம், பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பக்கபலமாக இருக்கும் பெரும்பாலான உயர் இராணுவ அதிகாரிகள் தன்னை அழைத்து, நியமனம் குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.

ரத்நாயக்கவை நீக்காவிடின் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என வினவியபோது, தான் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என்றும், நியமனத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக வருபவர்களுக்கு இடமளிப்பது குறித்து கட்சியில் உள்ள மற்றவர்களும் விரக்தியடைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தயா ரத்நாயக்க வரவேற்க வேண்டிய நபர் அல்ல என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூட ஏற்றுக்கொண்டார். ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்ட கட்சியில் உள்ள வேறு சிலரும் கட்சிக்கு ஆட்களை ஏற்றுக்கொள்வதற்கான கட்சித் தலைவரின் தீர்மானத்தால் தாங்களும் கலக்கமடைந்துள்ளதாக என்னிடம் தெரிவித்திருந்தனர்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா்.