தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை ஞாயிற்றுக்கிழமை (03) வந்தடைந்தது. இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.

தைரியம்,இரக்கம், பொறுப்பேற்றல் என்ற பெயரையுடைய, தன்னார்வ தொண்டர் நிறுவனம், ரோட்டரிக்கழக அனுசரணையுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11பேர் ஆக உள்ளது.

தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சிசிசி1333(ccc1333) என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு, இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது.

இத்தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான கடற்கரையில் தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் மாலை 05.00 மணிக்கு கடற்கரையில் நடாத்தப்பட்டது. அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.