தாயகப் பகுதிகளில் உணா்ச்சிகரமாக இடம்பெற்ற நினைவேந்தல்

89 தாயகப் பகுதிகளில் உணா்ச்சிகரமாக இடம்பெற்ற நினைவேந்தல்2009 ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 15 ஆவது வருடமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் இன்று முற்பகல் 10:30 அளவில் நடைபெற்றது.

நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard உம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நினைவேந்தல் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பங்கேற்றனர். நினைவேந்தலை முன்னிட்டு மல்லாவி , துணுக்காய் நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

மன்னாரில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் சிவகரன் தலைமையில் தந்தை செல்வா உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுச்சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. சித்தாண்டி- முச்சந்தி பிள்ளையார் ஆலய பிரதான முன்றலில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.