தாயாருக்கு அறிவிக்கப்பட்டது சாந்தனின் மரணச்செய்தி – சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தாா்

03 11 தாயாருக்கு அறிவிக்கப்பட்டது சாந்தனின் மரணச்செய்தி - சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தாா்
சாந்தனின் தாயாருடன் சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் மரணச் செய்தி அவரது தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி ஊடாக தாயாருக்கு மரணச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 28ஆம் திகதி காலை 7.50 மணிக்கு கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தன் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மீள் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் சட்டத்தரணி புகழேந்தி பெரும் பங்காற்றியதுடன், அவரும் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார்.

எவ்வாறாயினும், சாந்தனின் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அவரின் தாயாருக்கு மகனின் மரணச் செய்தியை அறிவிக்காது தனிமையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் சாந்தனின் மரணச் செய்தி தாயாருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சாந்தனின் உடல் அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள புகழேந்தி மூலமாகவே இந்தச் செய்தி அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

தாயாரின் மனநிலை காரணமாக சட்டத்தரணி ஊடாக மிகவும் பக்குவமாக மரணச் செய்தி எடுத்துச் சொல்லப்பட்டதாக அறியமுடிகின்றது.