திடீரென யாழ்ப்பாணம் வந்த அநுரகுமார திசாநாயக்க – தமிழரசுக் கட்சியுடன் இன்று அவசர சந்திப்பு

8 1 திடீரென யாழ்ப்பாணம் வந்த அநுரகுமார திசாநாயக்க - தமிழரசுக் கட்சியுடன் இன்று அவசர சந்திப்பு13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட அநுரகுமார திசாநாயக்க கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் உறுதியளித்தாா்” எனத் தெரிவித்தாா்.

“ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும்” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.