திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்க வந்த விமானங்கள் – சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகளும் ரத்து

17 திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்க வந்த விமானங்கள் - சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகளும் ரத்துசீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், UL 309 மற்றும் அபுதாபியில் இருந்து EY 394 என்ற Etihad Airways விமானம், கட்டுநாயக்கவைச் சுற்றியுள்ள பாதகமான வானிலையினால் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிங்கப்பூரில் இருந்து வந்த UL 309 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக, கொழும்பில் இருந்து மத்தளைக்கு புதிய பணியாளர்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அனுப்பியுள்ளது. 

இதேவேளை தென்பகுதியில் தொடா் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையடுத்து ரயில் சேவைகள் மற்றும் துார இடங்களுக்கான பஸ் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

காலி மாவட்டத்தில் நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனா். அம்புலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாத காரணத்தினால் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்டனா்.