தையிட்டி விகாரை காணியையும் இரகசியமாக அளவீடு செய்ய முயற்சி

தையிட்டி விகாரை காணியையும் இரகசியமாக அளவீடு செய்ய முயற்சிதையிட்டி விகாரை அமைந்துள்ள காணி கொழும்பு நிலஅளவைத் திணைக்களத்தினர் மூலம் அடுத்துவரும் சில தினங்களில் இரகசியமாக அளவீடு செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் தையிட்டிக் கிராமத்தில் மக்கள் நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள விகாரையைச் சூழவுள்ள காணிகளை நிரந்தரமாக விகாரைக்கே சுவீகரிக்க அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டும் பொதுமக்களால் தடுக்கப்பட்டன.

இதனால் தம்மால் அளவீடு செய்ய முடியவில்லை என்று யாழ்ப்பாணம் மாவட்ட நில அளவைத் திணைக்களம் நிலஅளவைத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கு எழுத்தில் தெரியப்படுத்தியிருந்தனர். அதன் அடப்படையில் நில அளவைத் திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி வருகை தந்து அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே கீரிமலை ஜனாதபதி மாளிகை கடந்த 16 ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்த நில அளவை உத்தியோகத்தர்களால் இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தையிட்டி விகாரையும் அடுத்த வாரம் இரகசியமாக அளவீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.