தொடரும் மழை, வெள்ளம், மண்சரிவினால் 15 போ் உயிரிழப்பு! போக்குவரத்தும் பாதிப்பு

19 தொடரும் மழை, வெள்ளம், மண்சரிவினால் 15 போ் உயிரிழப்பு! போக்குவரத்தும் பாதிப்புநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதுவரை அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்த அனர்த்தங்களால் 5,492 குடும்பங்களைச் சேர்ந்த 19,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் மண்மேடு சரிந்ததில் 11 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் தெய்ந்தர பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளுக்காக 3 ஹெலிகொப்டர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் போது, கிடைக்கப்பெறும் கோரிக்கைகளுக்கு அமைய மீட்புப் பணிக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர்
குரூப் கப்டன் துசான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர்
சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.