தோ்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுவின் பின்னணியில் இருப்பது யாா்? கேள்வி எழுப்பும் பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த சமிந்த தயான் லெனவ, தேர்தலை ஒத்திவைக்க தன்னைத் தூண்டியது யார் என்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என
எதிர்க்கட்சியின் உயர்மட்ட பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இந்த அடிப்படை உரிமை மனுத்தாக்கலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், எந்தவிதமான தலையீடும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில், குறிப்பாக பாணந்துறை காலி வீதியில் வசிக்கும் லெனாவா விளக்கமளிக்க வேண்டியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு, உயர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்னர் தம்மிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ கலந்தாலோசிக்கவில்லை என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்த அறிக்கையின் மூலம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பீரிஸ் கூறினார்.

அரசியலமைப்பின் 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுகளுடன் வாசிக்கப்பட்ட 126 வது பிரிவின் கீழும் அதன் படியும் லெனாவா உயர் நீதிமன்றத்தை நாடிய பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணி இந்த மனுவில் தலையிடும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அண்மையில் விடுத்த வேண்டுகோளை சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்த ஒரு அரசியல் கட்சி இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்ததில்லை என்றும் உயர் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

2022 ஜூலையில் கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதால் ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலை இருக்க முடியாது எனவும் முன்னாள் சட்டப் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேர்தல் ஆணைக்குழு முன்னேற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் என நாடு எதிர்பார்க்கிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 18 வரை நடத்தப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டில் எவரும் தலையிட முடியாது எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.