தோ்தலை நடத்தாதிருக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டம்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய பல்வேறு தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர்.

இதன்படி அரசியல் கட்சிகள், அரசியல் குழுக்கள், சிவில் மற்றும் பொது அமைப்புகள் எதிர்வரும் நாட்களில் இந்த இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினம் தொடர்பிலும், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பிலும் அரசியலமைப்புக்கு அமைவாக விளக்கம் தரப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்படும் வரையில் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேர்த்தல் நடத்தப்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வர்த்தகரான சீ.டீ.லெனாவ என்பவரால் நேற்றைய தினம் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே இவ்வாறு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜீ.எல்.பீரிஸ் அணி ஆகியன இது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூடிய விரைவில் தமது இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.