நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் புதிய வரைவு விரைவில் பாராளுமன்றம் வரும் – நீதி அமைச்சர் விஜயதாஸ

நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக வலைதளங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 2017 இல் இருந்த அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர அன்று நடவடிக்கை எடுத்துவந்தது. குறித்த சட்டம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து இதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பு அன்று ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் சமூகவலைத்தளங்களின் தலைமையகத்துடனும் இது தொடர்பாகக் கலந்துரையாட சிங்கப்பூருக்கும் எமது தரப்பினர் சென்றிருந்ததுடன் அவர்களும் இங்குவந்து இது தொடர்பாக கலந்துரையாடியபோது, சட்டரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சுய கட்டுப்பாட்டுக்குச் செல்வதற்கு அப்போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததால், 2023வரை அதன் பிரகாரமே செயற்பட்டு வந்தது.

என்றாலும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக 2023 வரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன. அதனைக் கருத்தில்கொண்டே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தது.

இலங்கை வரலாற்றில் இந்த சட்டமூலத்துக்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின்
பரிந்துரைகள் மற்றும் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டபோதும் சில திருத்தங்களை
சட்டப்பிரச்னை காரணமாக பாராளுமன்றத்தின் குழுநிலையின்போதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

என்றாலும் அந்தத் திருத்தங்கள் அனைத்தையும் கடந்த வாரம் பொது மககள் பாதுகாப்பு அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருந்தது. தற்போது அது சட்ட வரைவு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கு சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். அவர் குறித்த சட்ட மூலம் அரசமைப்புக்கு உட்பட்டதா என்ற சான்றிதழை வழங்கிய பின்னர் அமைச்சரவை மீண்டும் அதனை அனுமதிக்க வேண்டும். அமைச்சரவை அனுமதித்த பின்னர் எந்த வேளையும் வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும்.

வர்த்தமானி வெளியிடப்பட்டு 7 தினங்களுக்கு பின்னர் எந்த வேளையும் அதனை பாராளுமன்றத்துக்கு முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து 2 வாரங்களுக்குள் அதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். எனவே, இவ்வாறான சட்டங்களை கொண்டுவரும்போது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையிலும் பொது மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலுமே இதனை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது. சமூகவலைதளங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். அதனால் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுடன் மீண்டும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்” என்றும் அமைச்சா் விஜயதாஸ தெரிவித்தாா்.