படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல்

18 1 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்துக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் அவரின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு, ஈகைச் சுடர்களையும் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் பிரதி மேயர் தி.சத்தியசீலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் எஸ்.சுரேஷ், மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் பொன்.உதயஷரூபன், மாவட்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.