பரபரப்பான சூழ்நிலையில் இன்று யாழ்ப்பாணம் வரும் சுகாதார அமைச்சா் – சாவகச்சேரிக்கும் செல்வாா்

ramesh pathirana பரபரப்பான சூழ்நிலையில் இன்று யாழ்ப்பாணம் வரும் சுகாதார அமைச்சா் - சாவகச்சேரிக்கும் செல்வாா்சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட உயர்மட்டக்குழு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செல்லவுள்ளார்.

இதன் போது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கும் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாகவும் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒரு வார விடுமுறையின் பின் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீண்டவாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின், பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய அர்ச்சுனா நேற்று அங்கு
வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமுகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.

எனினும் பதில் அத்தியட்சகராக தற்போது கடமையில் உள்ள வைத்தியர் ரஜீவை, வைத்தியர் அர்ச்சுனா, அப்பதவிக்குரிய கதிரையில் இருந்து எழுப்பியதுடன் தான் அந்த கதிரையில் அமர்ந்து கொண்டதுடன் சில மணிநேரம் தனது அலுவல்களை மேற்கொண்ட பின் அங்கிருந்து வெளியேறினார்.

இதையடுத்து வைத்தியர் ரஜீவ் அங்கு தனது வழமையான கடமைகளை மேற்கொண்டார். இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய பதில் அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சில் இருந்து, தன்னை பதவி நீக்குவதற்கான கடிதம் தனக்கு உத்தியோகபூர்வமாகவராத நிலையில் தானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் எனத் தெரிவித்த அர்ச்சுனா, தனது விடுமுறை நிறைவடைந்த நிலையில் மீண்டும் கடமைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வரும்போது இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் எனவும் வைத்தியர் அர்ச்சுனா நம்பிக்கை தெரிவித்தார்.