பாலின சமத்துவம் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் – உயர் நீதிமன்றம் வியாக்கியானம்

“பாலின சமத்துவம்” சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. எனவே நீதிமன்றத்தின் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றுவதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

“பாலின சமத்துவம்” சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்த போதேஇவ்விடயத்தை குறிப்பிட்டதுடன் கூறுகையில்,

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பாலின சமத்துவம்’ சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை சபைக்கு அறிவிக்கிறேன். சட்டமூலத்தின் ஒரு சில உறுப்புரைகள் அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்கு முரணானது . இந்த சட்டமூலத்தின் உட்பிரிவு 2 இல் உள்ள 3,4 உடன் இணைத்து வாசிக்க வேண்டிய 9, 10, 12, 14(1)(இ) மற்றும் 27(1) ஆகியவற்றுடன் முரணானது.

இந்த சட்டமூலத்தின் உட்பிரிவு 2 இல் உள்ள 3 மற்றும் 4 சரத்துக்கள் சேர்த்து வாசிக்க வேண்டிய 9, 10, 12, 14(1)(இ) மற்றும் 27(1) ஆகியவற்றுடன் முரணானது. அத்துடன் 3, 4, 9 ,10 ஆகியன அரசியலமைப்புக்கு முரண். மேலும் அவை சட்டமூலத்தின் பிற விதிகளிலிருந்து பிரிக்கமுடியாதவை.

அரசியலமைப்பின் 83 மற்றும் அல்லது பிரிவு 84 இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் 80 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சட்டமூலத்தை முழுமையாக ஒட்டுமொத்தமாக சட்டமாக்க முடியாது.

அவ்வாறு நிறைவேற்றுவதானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் மற்றும் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை முழுமையாக நிறைவேற்றாமல் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது. உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களை நிறைவேற்றாமல் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதானால் பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது என்றார்.