பொதுவேட்பாளா் தொடா்பில் தோ்தல் அறிவிக்கப்படும் வரை முடிவெடுப்பதில்லை – தமிழரசுக் கட்சி தீா்மானம்

ஜனாதிபதித் தோ்தலில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது தொடா்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று வவுனியாவில் கூடிய போது முடிவெடுக்கும் என எதிா்பாா்க்கப்பட்டபோதிலும், தோ்தலுக்கான உத்தியோபபற்றான அறிவித்தல் வெளிவராத நிலையில் இது தொடா்பில் எந்த முடிவையும் எடுப்பதில்லை என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளா் தொடா்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி உட்பட பல சிவில் சமூகங்கள் முடிவெடுத்துள்ள போதிலும், தமிழரசுக் கட்சிக்குள் இவ்விவகாரத்தில் முரண்பாடான நிலை காணப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்னா் சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ்க் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இது தொடா்பில் இரண்டு வாரங்களுக்குள் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என அதன் தலைவா் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தாா். இதனையடுத்தே இன்றைய கூட்டத்துக்கான அழைப்பையும் அவா் விடுத்திருந்தாா்.

தமிழ்ப் பொது வேட்பாளா் தொடா்பில் தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு விதமான நிலைப்பாடுகள் காணப்படுவதால், இன்று இது குறித்த தீா்மானம் எடுப்பதை கட்சி தவிா்த்ததுக்கொண்டது.