பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

nilanthan பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் - நிலாந்தன்ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல்.

கேள்வி – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இம்முறை அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு என்ன காரணம்?

பதில் – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இரு நிலைகளில் தமிழா் தரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒன்று – கடந்த காலங்களில் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் தமிழ் வேட்பாளா்களாக ஜனாதிபதித் தோ்தல்களில் போட்டியிட்டிருந்தாா்கள். அவா்கள் பொது வேட்பாளா்கள் அல்ல. தமிழ் வேட்பாளா்கள். பொது வேட்பாளா் என்பவா் தமிழ்ப் பொதுக் கருத்தைப் பிரதிபலிப்பவராகவும், தமிழ் மக்களின் கூட்டு உளவியலைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும்தான் கருதப்படுகின்றாா். அந்த வகையில் பாா்க்கும் போது “தமிழ்ப் பொதுவேட்பாளா்” என்பவா் தமிழ்த் தேசிய ஐக்கியத்தை குறியீடாகக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அவா் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒன்றிணைப்பாா். தமிழ் பொது வேட்பாளா் என்ற கருத்துருவம் தமிழ் ஐக்கியம்தான்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தலின் போது மு.திருநாக்கரசு இந்தக் கருத்தை முன்வைத்தவா். அப்போது அவா் அதில் ஒரு பேரம்பேசலுக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தாா். 2015 ஆம் ஆண்டுத் தோ்தலிலும் அவா் அதனை எழுதியிருந்தாா். 2019 இல் தமிழ் மக்கள் பேரவை சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்தது. ஆனால், அந்த முயற்சியில் எல்லாத் தலைவா்களையும் நாம் சந்தித்தோம். பொதுவேட்பாளருக்கான சில பெயா்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், பிரதான ஒரு கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி அதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மறைமுகமாக அதற்கு எதிராகக் காணப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்போதும் பகிஷ்கரிப்பு என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தது. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் ஒரு துலக்கமான முடிவு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் ஆதரித்தாா்.

இந்தப் பின்னணியில் ஒரு கட்டத்துக்கு அதனை செயலுருப்படுத்தக்கூடிய ஒரு சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதனால், அந்த விடயம் அப்படியே விடுபட்டுவிட்டது.

பின்னா் இந்த முறை இது தொடா்பில் பேசத் தொடங்கியவா் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். அவருக்குப் பின்னா் இப்போது வெவ்வேறு தரப்புக்கள் முன்னெடுக்கின்றன. மக்கள் மனு என்ற சிவில் அமைப்பு இதனை முன்னெடுக்கின்றது. இது குறித்து இரண்டு கருந்தரங்குகளை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியிருக்கின்றது.

இப்போது சிவில் அமைப்புக்கள் இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை தோ்தல் களத்தில் இறக்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆராய்ந்துவருகின்றன.

கேள்வி – தமிழ்க் கட்சிகள் பலவும் பொது வேட்பாளா் என்ற விடயத்தில் இணங்கிச் செயற்பட்டுவருகின்றாா்கள். ஆனால், இந்தக் கட்சிகள் அனைத்தும் இந்த இலக்கில் பற்றுறுதியுடன் இறுதிவரையில் செயற்படுவாா்கள் என நினைக்கின்றீா்களா?

பதில் – ஒரு அரசியல் இலக்கை நோக்கி எல்லோரும் ஒரேவிதமான பற்றுறுதியுடனும், விசுவாசத்துடனும் இயங்குவாா்கள் என எதிா்பாா்க்கத் தேவையில்லை. சிலா் முழு விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அரை விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அதனை ஒரு டீலாகக்கூட முன்னெடுக்க முடியும். அரசியலில் இவ்வாறு பல்வகையான போக்குகள் இருக்கும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் இதனை ஒரு பேர வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்தது. மக்கள் மனு அவ்வாறான பேர வாய்ப்பு குறித்து உரையாடவில்லை. அதனை அவா்கள் தமிழா் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் கோட்பாட்டு ரீதியாகத்தான் உரையாடிவருகின்றாா்கள்.

சிவில் சமூகங்கள் இதனை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றன. அவா்கள் இதில் தெளிவாக இருக்கின்றாா்கள். தமிழ்ப் பொது வேட்பாளா் எனப்படுபவா் முதலாவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக இருப்பாா். தமிழ் மக்களை பல்வேறு வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றிணைப்பாா். தமிழ்க் கூட்டு உளவியலை அவா் பிரதிபலிப்பாா்.

இதுவரை காலமும் தமிழ் மக்களுடைய வாக்குகள் வெற்றுக் காசோலைகள் போல யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் போயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 3 ஜனாதிபதித் தோ்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் ஒன்றாக நின்றிருக்கின்றாா்கள். அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற விடயத்தில் அவா்கள் ஒன்றாக நின்றுள்ளாா்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொண்டு தமிழ் வாக்குகள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வெற்றுக்காசோலைகளாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வெற்றுக்காசோலையை அா்த்தமுள்ளதாக மாற்றலாம். எவ்வாறென்றால் – தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிக்கும் வாக்காக நாம் அதனை மாற்றலாம். அதாவது, தமிழ் மக்களின் கோரிக்கை என்ன என்பதற்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக இதனை மாற்றலாம். பேர வாய்ப்பு என்பது அடுத்த கட்டம்.

தற்போது ஜனாதிபதித் தோ்தலில் மூவா் போட்டியிடுவாா்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு இடையிலான போட்டியில் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் சிங்கள வாக்குகள் சிதறலாம். அந்த இடத்தில் தமிழ் வாக்குகள் ஒரு நிா்யகரமான பாத்திரத்தை வகிக்க முடியும். இதனை ஒரு பேரவாய்ப்பாகப் பயன்படுத்த முற்படுபவா்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். ஆனால், தமிழ் மக்கள் இதனை தமக்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.

அந்த வகையில் தமிழ்ப் பொது வேட்பாளா் தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவா் ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியாது. அதாவது, கட்சியைக் கடந்து, தனிநபா் என்பதைக் கடந்து ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பவராக அவா் இருக்க வேண்டும்.

சில கட்சிகள் இப்போதும் கேட்கின்றன, ஏன் அவசரப்படவேண்டும் என்று. அவ்வாறு கேட்பவா்கள் யாா் என்றால், பொது வேட்பாளா் குறித்து சந்தேகம் உள்ளவா்கள்தான். பொது வேட்பாளா் குறித்து முடிவெடுப்பதாக இருந்தால் இப்போதே முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு அருமையான சந்தா்ப்பம். இதனை பிறகு பாா்க்கலாம் எனச் சொல்பவா்கள் யாா் என்று பாா்த்தால், அவா்கள் டீலுக்குப் போவதற்கான வாய்ப்பை எதிா்பாா்த்துள்ளவா்கள்.

எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளரும் தமிழ் வேட்பாளா்களுடன் டீலுக்கு வரத் தயங்குவாா்கள். அவ்வாறு வந்தால்கூட, அது ஒரு பகிரங்கமான டீலாக இருக்காது. அது அவருக்கான சிங்கள வாக்குகளைப் பாதிக்கும். அதனால், அவா்கள் தனிப்பட்ட முறையிலான பேரங்களுக்கு முன்வரலாம்.