மக்கள் இம்முறை சரியான தலைவா்களிடம் நாட்டை ஒப்படைப்பாா்கள் – கா்தினால் மல்கம் ரஞ்சித் நம்பிக்கை

சர்வதேச கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக் கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உள்ளூர் விவகாரங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால், கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு திட்டமிட்டு தாக்குதல்களை நடாத்தியவர்கள் மற்றும் தேவாலயத்திற்குள் கைக்குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

”ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதை நாம் பார்க்கிறோம். பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதற்கும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் யார் காரணம் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை.

அனைத்து விடயங்களும் கம்பளத்தின் கீழ் மூடி மறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக சர்வதேச கடல்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“2024 தேர்தல் ஆண்டு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்கள் இந்த முறை சரியான தலைவர்களிடம் தேசத்தை ஒப்படைப்பார்கள் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்” என்று அவர் மேலும் கூறினார்