மட்டக்களப்பில் இருவா் ரி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு அழைப்பு – கிழக்கில் தொடரும் அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் அவர்களது வீடுகளுக்குச் சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ.திபாகரனை எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழங்கியுள்ளனர்.

அதேவேளை தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜீவரெத்தினம் தவேஸ்வரன் ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இந்தப் புதிய அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.