மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் – மட்டு.நகரான்

இலங்கையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்கும் கால்நடைகளினை விரிவாக்கம் செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய வருமானத்திற்கு பங்களிக்கமுடியும் என அரசாங்கம் நம்பிக்கைவெளியிட்டுள்ள அதேநேரம் கடந்த 64நாட்களாக கடும் மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரைக்காக போராடிவருகின்றனர்.

இந்த நாட்டில் காலம்காலமாக பால் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பினை கிழக்கு மாகாணம் வழங்கிவருகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பால் உற்பத்தியில் பாரியளவிலான பங்களிப்பினை வழங்கிவருகின்றது.அதுமட்டுமல்ல இலங்கையில் உற்பத்திசெய்யப்படும் பாலில் வடகிழக்கு மாகாணத்தில் உற்பத்திசெய்யப்படும் பால் அதிகளவான சத்துகள் இணைந்ததாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதற்கான காரணமாக இந்த மேய்ச்சல் தரையிருந்துவருகின்றது.ஆனால் இன்று அந்த மேய்;ச்சல் தரைக்காக போராடும் நிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

mathava 1 மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் - மட்டு.நகரான்கால்நடைகள் மூலம் பெறப்படும் பால் உற்பத்தியை பயன்படுத்தி நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக மார்தட்டும் இலங்கை அரசாங்கம் மட்டக்களப்பில் கடந்த 65நாட்களுக்கும் மேலாக போராடிவரும் கால்நடை பண்ணையாளர்கள் குறித்து இதுவரையில் கவனம் செலுத்ததாதது ஏன் என்ற கேள்வி சாதாரணமாக கிளம்பும்.அதற்கு காரணம் அவர்கள் தமிழர்கள்.

இந்த நாட்டில் தமிழர்களாக பிறந்தால் போராடியே ஆகவேண்டிய சூழ்நிலை.எமது எதிர்கால சமூகமும் போராடித்தான் வாழவேண்டிய சூழ்நிலை.இதன்காரணமாகவே இன்று வடகிழக்கிலிருந்து பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.அனைத்து வளங்களும் உள்ள பகுதியில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்பதற்காகவே இந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில் மறுபுறத்தல் மைலத்தமடு,மாதவனை பகுதியில் வாயில்லா சீவன் கருவறுக்கப்படும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.தினமும் மாடுகள் கொல்லப்படுகின்றன

.பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.மாடுகளுக்கு எதிராக மைலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அவர்கள் கடுமையான வகையில் பேசியிருந்தார்.புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சுpறிதரன்  வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய  வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துடுப்போகின்றது. காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார்.

மயிலத்தமடு , மாதவனையில் பெரும்  பாவத்தினை  இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது,   இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ”சீல்” வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத்தரின் பெயரால் விகாரைகளை அமைக்கின்ற ,அவரின் பெயரினால் இந்த நாட்டில் அநியாயங்களுக்கு எல்லாம் முடி சூட்டுகின்ற பிக்குமாரைக்கொண்டுள்ள இந்த நாட்டில் கருணையும் அஹிம்சையும் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்தபெருமான் சொன்ன பாவங்களை  நீங்கள் எங்கே கழுவப்போகின்றீர்கள், எங்கே கரைக்கபோகின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார் தற்போது இந்த கேள்விகளே தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது.

குடந்த 05ஆம் திகதி மயிலத்தமடு பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு பொலிஸார் காவலுக்குள்ள நிலையிலும் படையினர் பெருமளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையிலும் அப்பகுதியில் கால்நடைகள் தினமும் கொல்லப்படுகின்ற, காயப்படுத்தப்படுகின்றன, இறைச்சிக்காக வெட்டிக்கொல்லப்படுகின்றன.

East uni student மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் - மட்டு.நகரான்காவல்துறையினர் சட்ட விரோத குடியேற்றவாசிகளுக்கு ஆதரவான நிலையிலேயே இருந்துவருகின்றனர்.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் குறித்த பகுதியில் உள்ளவர்கள் அத்துமீறிய குடியேற்றவாசிகள் அவர்களை அங்கிருந்துவெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அரச காணியை அத்துமீறி குடியேறியதாக 13பேருக்கு எதிராக இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து தினங்களை கடந்துள்ளபோதிலும் இதுவரையில் நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையோ காவல்துறையோ நடவடிக்கையெடுக்கவில்லையென்பதே கவலைக்குரிய விடயமாகவுள்ளது.ஆனால் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் பயிர்களுக்கு காவல் வழங்கும் செயற்பாடுகளை காவல்முறை முன்னெடுத்துவருகின்றது.

கடந்த 65நாட்களுக்கும் மேலாக கால்நடை பண்ணையாளர்கள் தமது தொழில்களை இழந்து போராடிவருகின்றனர்.தமது உரிமையை,தமது பாரம்பரிய நிலத்தை தமக்கு வழங்குமாறு கோரியே இந்த போராட்;டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆனால் பண்ணையாளர்களின் போராட்டத்தினை கவனம் செலுத்தாது சட்ட விரோத குடியேற்றவாசிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையே காவல்துறை முன்னெடுத்துவருகின்றது.
மயிலத்தமடு,மாதவனை பகுதியினைப்பொறுத்த வரையில் நீண்ட நிலப்பரப்பாக காணப்படுகின்றது.கரடியனாறு, சந்திவெளி,வாழைச்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளும் ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது.

மூன்று பொலிஸ் நிலையங்களில் பரிபாலனத்தின் மயிலத்தமடு,மாதவனை பகுதி காணப்படுகின்றது.ஆனால் உச்ச நீதிமன்றம்,ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களினால் விடப்பட்ட கட்டளையினை நிறைவேற்றமுடியாத நிலையில் காணப்படுகின்றது.பண்ணையாளர்களை தேடிச்சென்று நடவடிக்கையெடுக்கும் பொலிஸார் அத்துமீறிய குடியேற்றவாசிகள் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை தெரிந்த விடயம் என்றாலும் ஓரளவுக்காவது மாவட்டத்திற்குள்ளாவது நடவடிக்கையெடுப்பார்கள் என்று பார்த்தால் எதுவும் இல்லை.
சுpல தினங்களுக்கு முன்னர் மயிலத்தமடு,மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் சிலரை அழைத்த சந்திவெளி பொலிஸார் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள கால்நடைகளினால் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடைகளை பண்ணைகளுக்குள் கட்டிவைக்குமாறு பணித்திருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய மீளாய்வுக்கூட்டங்களுக்கு வரும் பொலிஸார் விவசாய நடவடிக்கைகள் காலத்தில் கால்நடைகளை மயிலத்தமடு,மாதவனை பகுதிக்கு கொண்டுசெல்வதற்கான தீர்மானங்கள் எடுக்கும்போது அதற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில் இன்று கால்நடைகளை அடைக்குமாறு கூறுவதானது தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியையே வெளிப்படுத்திவருகின்றது.

இதேநேரம் நீதி மன்ற கட்டளையை  தாங்கள்  மதிப்பதாகவும்  இதே போன்று  அவர்களை அங்கிருந்து  வெளியேற்றுவதற்கு  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  முன்வருவார்களா ?  என்ற  சந்தேகம்  உள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்தார். “இதேபோல்  கடந்த  காலத்தில்  கொழும்பு  உயர்  நீதிமன்றில்  தொடுக்கப்பட்ட வழக்கிற்கும்  இதேபோன்றதொரு  தீர்ப்பு  உயர்  நீதிமன்றத்தினால் கட்டளை

பிறப்பித்தும்  அவர்கள்  அவ்விடத்தில்  இருந்து  வெளியேறவில்லை, பதிலாக சட்டவிரோத  நில  ஆக்கிரமிப்பு, அத்துமீறிய  குடியேற்றம்  மற்றும் கால்நடைகளுக்கு  அநீதி  விளைவித்தல்  என்பன  போன்ற  நடவடிக்கையில் தொடர்ந்து  ஈடுபட்டு  வருகின்றனர். சரியான  தீர்வொன்று கிடைக்கப்பெறும்   வரை  நாங்கள்  இவ்விடத்தில்  இருந்து செல்லப்போவதில்லை,  போராட்டத்தினை   கைவிடுவதுமில்லை” என தெரிவித்தார்.

batti catt மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் - மட்டு.நகரான்எவ்வாறாயினும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் என்பது வெறுமனே வாழ்வாதாரத்திற்கான போராட்டம் அல்ல. மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம். இந்த போராட்டம் வெற்றிபெறும்போது மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்பினை பாதுகாக்கமுடியும்.இன்றைய சூழ்நிலையில் பண்ணையாளர்களின் போராட்டத்துடன் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு சக்திகள் இணைந்திருக்கின்றன.இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.