மன்னாா் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை – குற்றஞ்சாட்டுகிறாா் சஜித் பிரேமதாச

மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26 டொலருக்கு கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு வருவதற்கு அரசாங்கம் உடன்பாட்டை தெரிவித்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

அங்கு அவா் மேலும் பேசுகையில், “மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26 டொலருக்கு கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு வருவதற்கு அரசாங்கம் உடன்பாட்டை தெரிவித்துள்ளது. போட்டி முறையில் அமைந்த விலைமனு கோரலுக்குச் சென்றால் குறைந்த தொகையில் பெறமுடியும். இது எதனையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்பட்டுள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணம் கொள்ளையடிக்கப்படுள்ளது” என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கான விலைமனு கோரலை போட்டி மிகுவிலைமனு ஊடாக மின்சார சபை கோருவதற்குத் தீர்மானித்திருந்தாலும், அந்த விலைமனு இதுவரை கோரப்படவில்லை. இந்தச் சட்ட விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. புதன்கிழமை மின்சார சபையின் 50 மெகாவாட் திட்டத்துக்கான போட்டி மிகு விலை மனு அறிவிக்கப்பட்டுள்ளது . 50 மெகாவாட்டின் அலகொன்றின் கொள்வனவு விலை 4.8 அமெரிக்க டொலர்கள் ஆகும். போட்டி மிகு விலைமனு இல்லாமல் போன 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றின் கொள்வனவு விலை 8.26 டொலர்களாக அமைந்துள்ளது. இதற்கேற்ப அரசின் பணக்கொள்ளை வெளிப்படையில் நடந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டினாா்.