மயிலத்தமடு மேய்ச்சல் தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மீண்டும் உத்தரவு

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், வனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்திருந்தார்.

இதன்போது மயிலத்தமடு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரையை உறுதி செய்யுமாறு தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. பண்ணையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கடந்த தடவை உத்தரவினைப் பிறப்பித்தபோதும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படாமை தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளதோடு குறித்த விடயத்தியத்துக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மேய்ச்சல் தரையில் விவசாயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என்பதும், குடியேற்றங்கள் அகற்றப்படும் என்பதும் அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி என்னிடத்தில் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததோடு, ஜுலை இரண்டாம் வாரத்தில் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்றார்.