மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளா் ஒருவரை நாம் களமிறக்குவோம் – மகிந்த ராஜபக்ஷ

mahinda மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளா் ஒருவரை நாம் களமிறக்குவோம் - மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்பதே மக்களுக்கு கூறவேண்டிய நற்செய்தி. உரிய நேரம் வரும் போது எமது வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம்” என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தாா்.

“மிகவும் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை நாம் முன்னிறுத்த உள்ளோம்” என்றும் தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, ஷரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. ஏனையவர்களின் ஒத்துழைப்புடனையே வேட்பாளரை நிறுத்துவோம்” என்றும் குறிப்பிட்டாா்.

“நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது வேட்பாளர் ஒருவரையே நிறுத்தினோம். தேர்தலின் பின்னர் எமது அரசாங்கமே அமையும்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பொது ஜன பெரமுன ஜனாதிபதித் தோ்தலில் கோடீஸ்வர வா்த்தகா் தம்மிக்க பெரேராவை களமிறக்கும் என்று செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் ஊடகவியலளா்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மகிந்தராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை முன்வைத்தாா்.

ஜனாதிபதித் தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடா்பில் பொது ஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் ராஜபக்ஷக்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.