மியன்மாா் பறந்த ஐக்கிய மக்கள் சக்தி உயா் குழு – அங்கு சிக்கியுள்ள இலங்கையா்களை மீட்க முயற்சி

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் உக்ரைன் ரஷ்யா போரில் கூலிப்படையாக செயற்படும் இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோரை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் இலங்கை போர்வீரர்களை மீட்பதற்கான இராஜதந்திர பணிக்காக அந்த நாடுகளின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு வேலைத்திட்டத்தை தயாரிக்கும் நோக்குடன் இவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார, ஜே.சி.அலவத்துவல மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் தலா 05 நாட்களை மியன்மார் மற்றும் ரஷ்யாவில் செலவிட்டு இந்த பணியை தொடங்க உள்ளனர்.

இலங்கையின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை தாய்லாந்து, மியான்மர் சங்க நாயக்கர்கள் மற்றும் ரஷ்யாவின் இராஜதந்திர அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.