மீண்டும் மொட்டுவில் இணைந்து கொள்வதற்கு விமல் முயற்சி

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து உருவாக்கிய சர்வஜன பலய கூட்டணி எதிர்பார்த்தளவில் மக்கள் ஆதரவை பெறாமையால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ள விமல் வீரவன்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் காரணமாக, கோட்டாபய ராஜபக்ச திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து கொள்வாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாமையால் பின்னர் திலித் மற்றும் விமல் இணைந்து சர்வஜன பலய என்ற கூட்டணியை உருவாக்கி அதன் தொடக்க விழாவை அண்மையில் நுகேகொடையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நினைத்த அளவுக்கு பொது மக்களின் ஆதரவு இருப்பதைக் காணமுடியவில்லை.

இந்தப் பின்னணியில் விமல் வீரவன்சவை மீண்டும் களத்துக்கு கொண்டு வர வேண்டுமென கடந்த வாரம் வரை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயற்பாட்டை மஹிந்தவும் பசிலும் எவ்வாறு முன்னெடுத்திருந்தனர்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் விமல் வீரவங்சவுக்கு இடையில், சங்ரிலா ஹோட்டலில் உள்ள அவரது இல்லத்தில், திலித் ஜயவீர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஜனாதிபதியுடன் விமலையும் உதயாவையும் கூட்டிணைக்க திட்டத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற போதும், அது அப்போது வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் விமல் வீரவன்சவை மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு கொண்டு வரும் வகையில் விசேட முகவரின் ஊடாக பசிலும் மஹிந்தவும் விமலுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த பிரதிநிதியிடம் விமல் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜபக்ச இல்லாத ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நின்றால் பரிசீலிக்கலாம் என விமல் வீரவன்ச சில சாதகமான குறிப்புகளை அளித்துள்ளதாகவும் அதன்படி, எதிர்காலத்தில் மீண்டும் சந்திப்பதற்கு இணக்கம்காணப்பட்ட நிலையில் கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.