மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கள் உருவாக்கப்படும் – நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாடும் சேதன பசளை திட்டத்தை விவசாயத்துறையில் முழுமையாக அமுல்படுத்தவில்லை. எமது அரசாங்கம் சேதன பசளை திட்டம் தொடர்பில் எடுத்த தவறான தீர்மானம் விவசாயத்துறையில் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

விவசாய குடும்ப பின்னணியை கொண்ட ராஜபக்ஷர்கள் விவசாயத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தினை தொடர்ந்து நாம் பதவி விலகினோம்.ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேற்றப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம். ஜனாதிபதியின் புதிய லிபரல்வாத கொள்கை நாட்டு மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஊடாக ராஜபக்ஷர்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது எனவும் மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.