முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களவருக்கு கையளிப்பு – குற்றஞ்சாட்டுகிறார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலையில் அவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.

ரவிகரன் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணத்தில் 2415 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்து 900 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து 4238 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் கொடுத்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.