முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச் சாட்டில் கைதானவர்களுக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் கஞ்சி காய்ச்சி பறிமாரிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரையும் எதிர் வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் தஸ்னீம் பௌசான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முள்ளி வாய்க்கால் கஞ்சி காய்ச்சி பறிமாறிய பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் இவ்வாறு நேற்று (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதில் கே.விஜிதா வயது(40), எஸ்.சுஜானி வயது (40) என்.ஹரிகரகுமார் வயது( 43), கிழக்கு பல்கலைக்கு தெரிவாகியுள்ள கலைப் பீட மாணவி க.தேமிலா வயது (22) என்பவர்களே இவ்வாறு கைதாகினர்.
பொலிஸாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்ட போதிலும் அதனை பொலிஸார் அவர்களிடத்தில் தடையுத்தரவை காட்டி தெளிவுபடுத்தியபோது அதனை மீறி குறித்த கஞ்சி பறிமாறும் நிகழ்வை நடத்திய குற்றச் சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.