மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

றோயல் பார்க்கொலை சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி, மைத்திரிபால சிறிசேன, வழங்கிய பொதுமன்னிப்பை செலுபடியற்றதாக்குவதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

கொழும்பு, ராஜகிரிய – றோயல் பார்க் வீட்டு தொகுதியில் 2005ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜுட் சமந்த ஜயமஹவை, குற்றவாளியாக என அறிவித்து அவருக்கு மரண தணடனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும், 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜுட் சமந்த ஜயமஹவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.

இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை உள்ளூர் மற்றும் சர்வதேச மரபுகளின்படி நாடு கடத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மனுதாரருக்கு ஒரு மில்லியன் ரூபாவும், ரோயல் பார்க் கொலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மற்றும் தந்தைக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும் நட்டஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.