மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரணில் – பதவியேற்பில் பங்கேற்ற சனியன்று டில்லி செல்கின்றாா்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தொலைபேசி அழைப்பில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அத்தோடு அந்த உரையாடலின்போது, இந்தியப் பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு விடுத்தார். இதன்போது ஜனாதிபதியும் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு இந்தியப் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த நநேந்திர மோடி, மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளைப் பெற்றுள்ளது. அதேநேரம் இந்தியக் கூட்டணி 232 இடங்களை வென்றது.

மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி நாளை மறுதினம் சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் மோடி. அதன்பின் அந்தக்
கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், மறுநாள் சனிக்கிழமை மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் எனத் தெரியவருகின்றது. அத்துடன், வெளிவிவகார அமைச்சரும் டில்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.