யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான்

d1 யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் - மட்டு நகரான்தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துதல் அளித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல பகுதிகள் போராட்டக்களமாகவே மாறிவருகின்றது. அதுவும் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களின் வீரம் செறிந்த ஆற்றல்களைக் கொண்டிருந்தவர்கள் ஆண்ட பகுதிகள் எல்லாம் இன்று தமது இருப்புக்காக போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர்.

d2 யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் - மட்டு நகரான்இன்று மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 225நாட்களையும் தாண்டி பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில் வாகரை பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு வாகரை மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையினையும் காணமுடிகின்றது.

மட்டக்களப்பு வாகரை பிரதேசம் என்பது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளமாகயிருந்த பிரதேசமாகும். வடகிழக்கிற்கு இணைப்பு பாலமாகயிருந்து இக்கட்டான யுத்த காலத்தில் வடக்கிற்கு போராளிகளை அனுப்பிவைப்பதற்கான முக்கிய தள பகுதியாகயிருந்ததுடன் கிழக்கின் ஒரு கட்டளை மையமாகவும் இருந்துவந்தது. இன்று வாகரையில் நடக்கும் சம்பவங்களும் செயற்பாடுகளும் அங்கு தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

வாகரை பிரதேச செயலகப்பிரிவானது 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுடன் 16 கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டது. வாகரைப் பிரதேச செயலகம் எனப்படும் கோறளைப்பற்று வடக்கு பிரிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதியை உள்ளடக்கியது. இப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் அதன் எல்லைகளாக வடக்கில் வெருகல் ஆற்றையும் திருகோணமலை மாவட்டத்தையும், கிழக்கில் வங்காள விரிகுடா கடலையும், தெற்கில் கோறளைப்பற்று மத்தி பிரிவையும், மேற்கில் பொலன்னறுவை மாவட்டத்தையும் கொண்டுள்ளது.

d4 யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் - மட்டு நகரான்அனைத்து வளங்களையும் இந்த பகுதி கொண்டிருக்கின்றபோதிலும் இங்குள்ள வளங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக அப்பகுதி வளங்களை தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

யுத்தம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தெற்கினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வளமிக்க சுமார் 1500 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக இல்மனைட் அகழுதல், இரால் பண்ணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இல்மனைட் அகழ்வு செய்யப்படுமானால் வாகரை பிரதேசத்தின் பல பகுதிகள் அழியும் நிலைமைமையும் ஏற்படும் என வாகரை பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல தடவை வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்திய மக்கள் மட்டக்களப்பு நகருக்கும் வருகைதந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தினை தாண்டியதாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஒடுக்குவதற்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர்.ஒரு பகுதியில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்தவேண்டுமானால் அங்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர். தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு தேவையானவற்றினை மேற்கொள்ளல், ஆசைகாட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல், கொள்ளையர்களை அரசியலுக்குள் கொண்டுவந்து தமது தேவைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்ற பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றது.

d3 யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் - மட்டு நகரான்வாகரையில் இல்மனைட் அகழ்வு என்பது வாகரையின் கரையோரப்பகுதியை முற்றாக அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. வாகரை பகுதியின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையினை அண்டியுள்ளதால் அதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. யுத்த காலத்தில் தமிழிழீ விடுதலைப் புலிகளின் பொருண்மிய துறையின் பெரும்பங்களை வாகரை கடற்பகுதியே பூர்த்திசெய்துவந்தது.இதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் விருத்தியடைந்ததுடன் பொருண்மியமும் வளர்ச்சிபெற்றது.யுத்ததிற்கு பின்னர் குறித்த செயற்பாட்டினை பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான ஜெயம் என்பவர் பொறுப்பேற்று அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெயற்பட்டதன் காரணமாக வாகரை மக்கள் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லமுடியாத நிலையிருந்தது. எனினும் பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் காரணமாக அந்த நிலைமை தளர்ந்து வாகரை மக்கள் கடற்பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் நிலையேற்பட்டது.

எனினும் தொடர்ச்சியாக வாகரை பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கடலை நம்பியே வாகரையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் இன்று வெருகல் தொடக்கம் வாகரையின் காயன்குடா வரையான பெருமளவான கடற்பகுதியில் இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதற்காக தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கடற்பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் வாகரை பகுதிகளின் மக்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அப்பகுதியையே அழிக்கும் நிலையுறுவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் அரசாங்கம் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையினை எடுத்துவருகின்றது. இந்த திட்டத்திற்கு பின்புலமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் செயற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கதிரவெளி தொடக்கம் காயன்குடா வரையிலான மக்கள் இந்த இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடிவரும் நிலையில் வறிய மக்களின் நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பொருட்களையும் பணத்தையும் வழங்கி எதிர்ப்பு நிலையினை மாற்றுவதற்கான முயற்சிகள் பிள்ளையான் போன்றவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிராகவும் வாகரை பிரதேச மக்கள் போராடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதேபோன்று வாகரையில் இரால் பண்ணை என்ற திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இரால் பண்ணை ஆரம்பிக்கப்படுமானால் வாகரையில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள சுமார் 15ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகரை பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரான தபேந்திரன் தெரிவிக்கின்றார். “கடந்த காலத்தில் 2500 நிலப்பரப்பினை ஆற்றினை அண்டிய வகையில் இந்த இரால் வளர்ப்புக்கு ஒதுக்க நடவடிக்கையெடுக்கத்தபோது நாங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி அதனை தடுத்து நிறுத்தினோம்.

ஆனால் இன்று அந்த திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த ஆற்றினை நம்பியே அந்த 15ஆயிரம் குடும்பங்களும் உள்ளன.அங்கு இரால் வளர்ப்பு நடைபெற காணிகள் வழங்கப்படுமானால் முதலாளிகள் இலாபம் ஈட்டுவார்கள் ஆனால் ஆற்றினை நம்பியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரத்தினை இழப்பார்கள். அத்துடன் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சுமார் 45ஆயிரம் கால்நடைகள் உள்ள மேய்ச்சல் தரை பாதிக்கப்படுவதுடன் வாகரையினை தாங்கிய நிலையில் உள்ள கண்டல் தாவரங்களும் அழிக்கப்படும் நிலையேற்படும்.

இதேபோன்று ஆற்றினை சூழவுள்ள காடுகளும் அழிக்கப்பட்டுத்தான் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கடல்நீரை ஆற்றுக்குள் பாய்ச்சிதான் இரால் பண்ணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். யுத்த காலத்தில் நாங்கள் போராடி பாதுகாத்த பகுதியை இன்று இலகுவில் அழிக்கும் நிலையினை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுமையாக இருக்கமுடியாது.எமது நிலத்தினை பாதுகாப்பதற்கு நாங்கள் உயிரைகொடுத்து போராடவும் தயாராகயிருக்கின்றோம்” என்று தபேந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் வாகரை பிரதேசத்தின் இந்த அழிவின் பின்னணியில் பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செயற்படுவதாக வாகரை பிரதேச மக்களும் அரச உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் வாகரை பிரதேச மக்களின் இந்த போராட்டத்தினை வடகிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்து வாகரை பிரதேச மக்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அனைவரும் முன்வரவேண்டும்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்போல் யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும். கிழக்கில் தமது இருப்பினை தக்கவைப்பதற்கு வடகிழக்கு இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஓரளவாவது நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.