ரணிலுக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டுவுக்கு டில்லி அழுத்தம் – முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு பொதுஜன பெரமுன கட்சிக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துவருகின்றது என்று ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-

தம்மால் இயக்ககூடிய நபரொருவர் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என இந்தியா கருதுகின்றது. பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்க ஆதரவு வழங்குமாறு பஸில் ராஜபக்ஷவுக்கு அந்நாடு அழுத்தம் கொடுத்து வருகின்றது. டில்லியால் என்ன கூறப்பட்டாலும் அவற்றை கேட்பார், ஆனால் பொருத்தமான நேரத்தில் உரிய வகையிலேயே பஸில் முடிவுகளை எடுப்பார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்கு இருந்த இறுதி வாய்ப்பையும் ரணில் விக்கிரமசிங்க தவறவிட்டுவிட்டார். ராஜபக்சக்களின் பொறுமை எல்லை தாண்டிவிட்டது. ரணிலை ஆதரித்தால் கட்சியைவிட்டு வெளியேறி, புதிய கட்சியை ஆரம்பிப்பேன் என நாமல் ராஜபக்ச கூட கூறிவிட்டார். எனவே, ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளர் களமிறங்குவது உறுதி. அந்த வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பதும் உறுதி. சிலர் ராஜபக்சக்கள் வேண்டாம் என்கின்றனர். முதுகெலும்பிருந்தால் – முடிந்தால் ரணில் விக்கிரமசிங்க யானைச்
சின்னத்தில் வந்து போட்டியிட்டு காட்டட்டும்” என்றார்.