ரணிலை ஆதரிப்பதா? இல்லையா? மஹிந்த, பஸில் கடும் முரண்பாடு

இலங்கைக்கான ஒரு நாள் சூறாவழிப் பயணத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சா் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷவும் தனியாகச் சென்று சந்தித்த அதேவேளையில், கட்சியின் ஸ்தாபகா் பஸில் ராஜபக்ஷ தனியாக இரகசியமாகச் சென்று ஜெய்சங்கரை சந்தித்துள்ளாா். 

கடந்த வியாழக்கிழமை இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சா் ஜெய்சங்கா், ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாா். எதிா்வரும் ஜனாதிபதித் தோ்தல் மற்றும் இந்தியப் பிரதமரின் உத்தேச இலங்கை விஜயம் குறித்தே முக்கியமாக தன்னுடைய பேச்சுக்களின் போது அவா் கவனத்தைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை செய்சங்கா் சந்தித்த போது, பொது ஜன பெரமுனவுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது, கட்சியின் தலைவா் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ சகிதம் சென்று செய்சங்கரை சந்தித்திருந்தாா். அதில் பஸில் ராஜபக்ஷ இடம்பெற்றிருக்கவில்லை. இதன்போதும் ஜனாதிபதித் தோ்தல் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. தாம் இன்னும் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தாா்.

இதனைத் தொடா்ந்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் பஸில் ராஜபக்ஷ தனியாகச் சென்று ஜெய்சங்கரைச் சந்தித்தாா். இதன்போதும் ஜனாதிபதித் தோ்தல் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. “ஜனாதிபதித் தோ்தலில் நாம் தம்மிக பெரேராவை வேட்பாளராகக் களமிறக்கப்போகின்றோம்” என பஸில் ராஜபக்ஷ இதன் போது திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாா். “பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தோ்தலில் தனியாக களமிறங்கும்” என்றும் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தாா்.

ஜனாதிபதித் தோ்தல் விடயத்தில் ராஜபக்ஷ சகோதரா்களிடையே உருவாகியிருக்கும் கடுமையான முரண்பாட்டை ஜெய்சங்கருடனான இந்தச் சந்திப்புக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக கொழும்பில் இன்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.