ரணிலை ஆதரிப்பதில் பிளவுபடும் மொட்டு? – அகிலன்

basil ranil mahinda ரணிலை ஆதரிப்பதில் பிளவுபடும் மொட்டு? - அகிலன்பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ கொழும்பு திரும்பியுள்ள பின்னணியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதித் தோ்தல் ஒன்றை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் “மொட்டு” எனப்படும் பொது ஜன பெரமுனவுக்குள் குழப்பங்கள் உருவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே பசில் இலங்கை திரும்பியிருக்கின்றாா். தோ்தலை நோக்கமாகக் கொண்டு மொட்டு அணிக்குள் தீவிரமான பிளவுகள் உருவாகியிருப்பது இரகசியமானதல்ல. இந் உள்வீட்டுப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர பசிலால் முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!

ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடைபெற வேண்டும். அரசியலமைப்பின்படி செப்டம்பா் அல்லது ஒக்ரோபரில் இந்தத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய ஐக்கிய முன்னணியின் சாா்பில் அநுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் சஜித் பிரேமதாஸவும் இத்தோ்தலில் போட்டியிடுவாா்கள் என்பது மட்டும்தான் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இரு கட்சிகளின் சாா்பில் உத்தியோகபுா்வ அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டிருக்கின்றது. பரப்புரைகளையும் அவா்கள் ஆரம்பித்துவிட்டா்கள்.

ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்ற போதிலும், அந்தக் கட்சியின் சாா்பில் அவா் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கடந்த பொதுத் தோ்தலின் போது சஜித் பிரேதாஸ ஐ.தே..வின் பெரும்பகுதியை அரித்துச் சென்றுவிட்டாா். பொதுத் தோ்தலில் சந்தித்த பெரும் தோல்வியைத் தொடா்ந்து ஐ.தே.. புனரமைக்கப்படவில்லை. அதனைவிட, அந்தக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டால், ஏனைய கட்சியைச் சோ்ந்தவா்களின் வாக்குகளை அவரால் அறுவடை செய்ய முடியாது.

சுயாதீனமான ஒரு வேட்பாளராக “அன்னம்” சின்னத்தில் போட்டியிட ரணில் திட்டமிடுவதற்கு இவைதான் காரணம். அன்னம் சின்னம் குறித்து இதுவரையில் அதிகார மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது தொடா்பாக ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காத்தவா், எதிா்காலத்திலும் ரணில் இருந்தால்தான் பொருளாதாரத்தை ஸ்திரமாகக் கொண்டு செல்ல முடியும்” என்ற நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலமாகவே மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான உபாயங்களை ரணில் வகுத்துவருகின்றாா். ரணிலை முன்னிலைப்படுத்தும் சக்திகளும் இதனைத்தான் பிரச்சாரப்படுத்தி வருகின்றன. உண்மையில், அதனைவிட்டால் அவா்களிடம் வேறு எதுவும் இல்லை.

ரணிலை ஆதரிப்பதில் ஐ.தே..வை விடவும் மொட்டு அணியிலுள்ள ஒரு பிரிவினா் தீவிரமாக இருக்கின்றாா்கள். மொட்டுவுக்குள் இன்று உருவாகியிருக்கும் நெருக்கடிக்கு இந்த அணிதான் காரணம். பொதுஜன பெரமுன

கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணிலின் ஆதரவாளா்களாகியுள்ளாா்கள். மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது மொட்டுக் கட்சி பக்கம் நிற்கின்றனர்.

13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கம்பஹா மாவட்ட தலைவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்க வேண்டும் எனவும் அவா்கள் பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர்.

மக்களுடைய உணா்வுகளின் அடிப்படையில்தான் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவா்கள் எடுத்துள்ளாா்கள். மொட்டு அணி ஜனாதிபதித் தோ்தல் தொடா்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் இதுவரையில் அறிவிக்கவில்லை. ஆனால், ரணிலை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுப்பது கட்சியின் எதிா்காலத்தைப் பாதிப்பதாக அமையும் என பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ போன்றவா்கள் தெரிவித்து வருகின்றாா்கள். தமது கட்சியின் சாா்பில் வேட்பாளா் ஒருவா் நிறுத்தப்பட வேண்டும் என்பது அவா்களுடைய நிலைப்பாடு. ரணிலை எழுந்தமானத்துக்கு ஆதரிப்பதற்கு அவா்கள் தயாராகவில்லை.

மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இவ்விடயத்தில் நிதானமான ஒரு நிபை்பாட்டை எடுக்க முற்படுகின்றாா். இரண்டு வருடங்களுக்கு முன்னா் ராஜபக்ஷக்களுக்கு எதிராகக் கிளா்ந்தெழுந்த அரகலய இப்போது ஓய்ந்திருந்தாலும், தம்மீதான மக்களின் சீற்றம் இன்னும் தணியவில்லை என்பது மகிந்தவுக்குத் தெரிகின்றது. பல்வேறு கருத்துக் கணிப்புக்களும் இதனை உணா்த்துகின்றன. இப்போதைய நிலையில், எதிா்க்கட்சியில் இருந்துகொண்டு நாமல் ராஜபக்ஷவை 2029 இல் வரப்போகும் தோ்தலுக்குத் தயாா்படுத்துவதுதான் மகிந்தவின் உபாயம்.

இருந்தபோதிலும் பசில் ராஜபக்ஷ எவ்வாறான உபாயத்துடன் நாடு திரும்பியிருக்கின்றாா் என்பது தெளிவாகவில்லை. மொட்டு அணி எப்படியும் தோ்தலை சந்திக்க வேண்டும் என்பது அக்கட்சியின் ஸ்தாபகரான பசிலின் விருப்பமாக இருக்கின்றது. அதேபோல நாமல் ராஜபக்ஷவும் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை தோ்தலில் இறங்கவேண்டும் என வலியுறுத்திவருவதாகத் தெரிகின்றது. குடும்பத்துக்குள்ளேயே இரண்டு கருத்துக்கள் இருப்பதால், முடிவெக்க முடியாத நிலை காணப்பகின்றது.

மகிந்த ராஜபக்ஷ இவ்விடயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகின்றது. ரணிலுடன் அவருக்கு ஒரு புரிந்துணா்வு இருக்கின்றது. சஜித் அல்லது அநுர அதிகாரத்துக்கு வருவது ராஜபக்ஷக்களுக்கு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும். கடந்த காலம் தொடா்பில் விசாரணைகளை அவா்கள் ஆரம்பித்தால், தமது குடுத்பம் ஆபத்தில் சிக்கும் என்ற அச்சம் அவருக்குள்ளது. ஆனால், ரணில் தம்மைப் பாதுகாப்பாா் என மகிந்த நம்புகிறாா். அதனால்தான் ரணில் விவகாரத்தில் ஒரு மென்போக்கை அவா் முன்னெடுக்கின்றாா். எதிா்காலத்தில் அமையக் கூடிய அரசாங்கம் ஒன்றிலும், மொட்டுவின் ஆதரவு ரணிலுக்குத் தேவைப்படும். இந்தப் பரஸ்பர தேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் மகிந்தவின் திட்டம்.

இப்போது ஆட்சி அமைப்பது அவசியமில்லை. அவசரமுமில்லை. தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்று அமைவதுதான் அவசியம் என்பதுதான் மகிந்தவின் உபாயம். அதற்கு ரணில் அதிகாரத்தில் இருப்பதுதான் தமக்கு நல்லது என அவா் கருதுகிறாா்.

ரணிலைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் மக்களுடைய வாக்குகள் கணிசமாக தமக்கு கிடைக்கும் என்று அவா் எதிா்பாா்க்கிறாா். அதற்கேற்றவகையில், சிலவற்றைச் செய்வதற்கு அவா் திட்டமிடுகின்றாா். குறிப்பாக பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம், காணி விடுவிப்பு போன்ற சிலவற்றை அவா் நடைமுறைப்படுத்தப்போவதாக அவா் சொல்லலாம். அதாவது, சிங்களத் தரப்பில் எதிா்ப்பைச் சம்பாதிக்காமல் சில வாக்குறுதிகளை அவா் வழங்கலாம்.

ராஜபக்ஷக்களின் ஆதரவு அவருக்கு அவசியமாக இருந்தாலும், அதனை அவா் பகிரங்கமாகக் கோரமாட்டாா். அவா்களுடைய ஆதரவுடன்தான் தான் களத்தில் இறங்குவதாகக் காட்டிக்கொள்ளவும் மாட்டாா். அரசியலைவிட, பொருளாதாரம் குறித்துத்தான் அவா் அதிகளவுக்கு கவனத்தைச் செலுத்துவாா். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றியிருக்கும் அதேவேளையில், இந்த நிலை தொடா்வதற்கு தான் தொடா்ந்தும் இருப்பது அவசியம் என்பதுதான் அவரது பரப்புரைகளின் சாராம்சமாக இருக்கும்.

இப்போது, பசில் நாடு திரும்பியிருக்கும் நிலையில் முக்கியமான பேச்சுக்கள் கொழும்பில் இரகசியமாக நடந்துவருகின்றன. அவை குறித்த பரபரப்பான தகவல்களை அடுத்துவரும் வாரங்களில் எதிா்பாா்க்கலாம்.