ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையா்களை அனுப்பும் மோசடியின் பின்னணியில் துாதுவா்? பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. ரஷ்ய
யுத்தக் களத்தில் 74 இலங்கையர்கள் உயிரிழந்தனர். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் காமினி வலேபொட சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ரஷ்யாவில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய இராணுவத்தில் இணைக்கும் மோசடிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய யுத்தக்களத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் எம்மைத் தொடர்பு கொண்டு அழுது புலம்புகிறார்கள். யுத்தக் களத்துக்கு செல்வதை தாங்கள்
அறியவில்லை என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரஷ்ய யுத்தக் களத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதில்லை. 14 நாட்களாக ஒரே ஆடையுடன் அவர்கள் யுத்தக் களத்தில் இருப்பதாக அறிய முடிகிறது. ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான ரஷ்யத் தூதரகத்துடன் தொடர்புகளை மேற்கொண்ட போது, இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் சென்றுள்ளார்கள். ஆகவே எமக்குத் தலையிட முடியாது என்று தூதரகம் குறிப்பிடுகிறது.

இவ்விவகாரத்தை மனிதாபிமான முறையில் ஆராய வேண்டும். தனக்கு அதிகாரம் கிடைத்தால் இலங்கையர்களை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துக்குள் அழைத்து வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடியின் பின்னணியில் அவர் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. 600 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ரஷ்ய யுத்தக் களத்தில் இதுவரை 74 இலங்கையர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 50 இலங்கையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம். ஆகவே ரஷ்ய விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்” என்றும் அவா் தெரிவித்தாா்.