ராஜபக்ஷக்களைக் கைவிட ரணில் மறுப்பு – அதிருப்தியடைந்தவராக நிமல் லான்சா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டுமென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் பரிந்துரையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்க கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்தர்ப்பத்திலேயே, பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில்,ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டுமென நிமல் லான்சாவின் பரிந்துரையை அவர் நிராகரிக்க வேண்டியிருந்தது.

மஹிந்த, பசில், நாமல் மற்றும் சமல் ஆகிய அனைத்து ராஜபக்சக்களுடன் தொடர்பு கொள்வதை விட்டுவிடுவதே நிமல் லான்சா கூறிய யோசனையாகும். அதன் அடிப்படையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வெற்றிபெற முடியும் என லான்சா கூறியுள்ளார்.அத்துடன் அவ்வாறானதொரு நிலையில் அவர் அதிக வாக்குகளைப் பெறுவார் என்றும் நிமல் லான்சா கருத்து தெரிவித்துள்ளார். எனினும், அந்தப் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் ஆலோசனை நடத்தியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் அடங்குவர். இந்த நடவடிக்கையை இருவரும் நிராகரித்தனர். மேலும், பொதுஜன பெரமுனவில் குறிப்பிடப்படாத பிரிவு ஒன்றும்
விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக அறியப்படுகிறது.

லான்சா முன்னர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஜனாதிபதி செயலகத்தில் அலுவலக இடத்தை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்காக, குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொள்வதே அவரது பணிகளில் ஒன்றாக இருந்தது. அப்போது, அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 39 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அது நிறைவேறவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவான புதிய கூட்டணி என்று பெயரிடப்பட்டதை லான்சா உருவாக்கினார். தனி அலுவலகத்தையும் திறந்தார். புதிய கூட்டணி உறுப்பினர்களில் சிலர் மற்ற பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த குழுக்களையும் சேர்ந்தவர்கள். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் இணையவில்லை.

லான்சா, தனது தலைவரான ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய ஆலோசனை குறித்து கருத்து கேட்கப்பட்டதற்கு, “நான் நம்புவதை அவரிடம் கூறினேன். நான் பெயர்களை பேசவில்லை. நீங்கள் உங்கள் முடிவுகளை எடுக்கலாம்” அவர் விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.