வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளதாக பொய்யான கருத்துக்களை அரசு முன்வைக்கின்றது – சஜித் பிரேமதாச

நிதி தரப்படுத்தல் நிறுவனங்களைக் கூட புறக்கணித்து நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

களுத்துறையில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் இதனை அவா் தெரிவித்தாா்.

சஜித் பிரேமதாச அங்கு தொடா்ந்து பேசுகையில், “தற்போது எமது நாடு வங்குரோத்தடைந்து இக்கட்டான கட்டத்தில் உள்ளது. வங்குரோத்து நிலை என்பது கடனை திரும்பச் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை . இருதரப்பு, பலதரப்பு மற்றும் இறையாண்மைப் பத்திரங்கள் போன்ற கடன் வகைகளில் கடன்களை திருப்பிச் செலுத்துவதும் முறையை சுட்டுகிறது” என்று தெரிவித்தாா்.

“இந்த நிறுவனங்கள் ஒருநாடு கடன் பெற்றால் அதனை எவ்வாறு மீள் செலுத்தும் என்பது தொடர்பான குறிகாட்டிகளை வெளியிடும். இந்த நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் நாடுகள் கடன்பெற முடியுமா? அவற்றை மீள் செலுத்தும் ஆற்றல்கள் உள்ளனவா? என்பது குறித்த குறிகாட்டிகளை வெளியிடுகின்றன. குறித்த நாட்டின் நிறுவனங்கள் வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களைக்கொண்டே இந்த குறிகாட்டிகள் வெளியாகும்” என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

“பரீட்சைக்கு தோற்றிய பின்னர், பெறுபேறுகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பரீட்சார்த்திகளால் அல்லாது பரீட்சை திணைக்களத்தினாலயே வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நாம் வங்குரோத்தடைந்து விட்டோமா இல்லையா என்பதை எமது நாட்டின் ஆட்சியாளர்களால் தீர்மானிக்க முடியாது. நாட்டின் நிதித் திறனை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களால் எடுக்கப்படும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இது அமைகிறது. சில தரவரிசைகளின்படி எமது நாடு இன்னும் அந்த நிலையை எட்டவில்லை” என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.