வடக்கு, கிழக்கில் 18 ஆயிரம் ஏக்கா் காணி படையினரின் ஆக்கிரமிப்பில் – சிறிதரன்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் காணிகளை  படையினர் ஆக்கிரமித்துள்ளனா். இதில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 9543 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவித்த  தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன்  வடக்கு மாகாணத்தில் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக தன்னால திரட்ட ப்பட்ட  தகவல்களைக் கொண்டு, தன்னால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும்  சபைக்கு  சமர்ப்பித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின்  கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது இந்த அறிக்கையை சபைக்கு அவா் சமர்ப்பித்து உரையாற்றினாா்.

“வடக்கு  கிழக்கு மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு என்று  குறிப்பிட்டுக் கொண்டு 18 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களின்  காணிகள்  படையினர்,சிவில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இந்த காணிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் சட்டவிரோத  நிர்மாணிப்புக்களும்  இடம்பெற்றுள்ளன.

என்னால் பிரதேச ரீதியாக திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க   அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.